பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனதின் குரல் எனப் பொருள்படும் 'மன் கி பாத்' எனும் நிகழ்ச்சியைத் தொடங்கினார். ரேடியோவில் நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவார். இப்போது இந்த நிகழ்ச்சியின் 100வது பகுதி வருகிற 30 ஆம் தேதி (30.04.2023) நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு டெல்லியில், ‛மன் கி பாத் 100' என்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ள 700 நபர்களில் பலரும் கலந்துகொண்டனர்.
திரைத்துறையைச் சேர்ந்த அமீர்கான், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமீர்கான் கூறுகையில், "நாட்டின் தலைவர் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து, ஆலோசனைகளை வழங்குகிறார். இது மிக முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கிறேன்" என்றார்.