உலகெங்கும் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஆஸ்கர் விருது விழா நிகழ்வில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு மத்தியில் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. அவை பின்வருமாறு...
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் மேடைத் தொகுப்பாளரின்றி விழா நடைபெற உள்ளது. விருதினை வழங்கவோ அல்லது பெறவோ மேடை ஏறும் கலைஞர்கள் மேடையில் இருக்கும் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். விழாவில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த 170 எண்ணிக்கையானது சுழற்சி முறையில் செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு விருந்தினரும் எப்போது உள்ளே நுழைய வேண்டும், எப்போது வெளியே வர வேண்டும் என்கிற வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.
விழாவில் நேரில் பங்கேற்பவர்கள் அதற்கு முன் மூன்றுமுறையாவது கோவிட்-19 பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வர வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வர முடியாத பங்கேற்பாளர்கள், அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே விழாவில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல ஸ்டார் மூவிஸ் சேனலில் இந்த விழாவின் நேரலை ஒளிபரப்பாகும்.