கமல் - இளையராஜா... இந்த நட்பு தமிழ் சினிமா உலகில் மிகப் புகழ் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என அதற்கடுத்த இசையமைப்பாளர்கள் வந்து ஆதிக்கம் செலுத்தி, அவர்களது பாடல்கள் ஹிட்டான காலத்திலும் தன் பெரிய ப்ராஜெக்டுகளுக்கு இளையராஜாவின் இசையைத் தேடியவர் கமல்.
ஹே ராம், விருமாண்டி ஆகியவை உதாரணம். பிற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினாலும் தனக்கு ஃபேவரிட் ராஜாதான் என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் கமல். இளையராஜா இசையமைத்த கமல் படங்களில் பெருவெற்றி அடைந்தவையின் எண்ணிக்கை பெரியது. இளையராஜா இசையில் கமல் பல பாடல்களையும் பாடியுள்ளார். 'குணா' படத்துக்காக இவர்கள் பாடல் கம்போசிங் செய்த அந்த ஆடியோ பதிவு படம் வெளியாகி சில காலம் கழித்து வெளியிடப்பட்டது. அத்தனை சுவாரசியமாக இருக்கும் அந்த ஆடியோ. கிண்டல், நகைச்சுவை, ரசனை என இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்குமான நட்புக்கு அந்த 'குணா கம்போசிங்' ஆடியோ ஒரு பெரிய சான்று. இன்றும் யூ-ட்யூபில் அது கிடைக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களும் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களும் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். விழாவில் மேடையேறிய கமல்ஹாசன், தன் நெடுநாள் நண்பரான இளையராஜாவுக்காகவும் ரசிகர்களுக்காகவும் மூன்று பாடல்களை பாடி மகிழ்வித்தார். 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் 'நினைவோ ஒரு பறவை', 'ஹே ராம்' படத்தின் 'ராம் ராம்', 'விருமாண்டி'யிலிருந்து 'உன்ன விட' ஆகிய பாடல்களை பாடினார் கமல். ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு ஆரவாரம் வெளிப்பட்டது.