ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியாகி அதன் பிரம்மாண்டத்தாலும், ரஜினிகாந்த்தின் ஸ்டைலான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தில் பறவை வடிவில் பலரைக் கொல்லும் பறவைக் காதலராக 'பக்ஷிராஜன்' என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷய்குமார். 'பக்ஷி' என்றால் பறவை என்பதும் அந்தப் பெயருக்கு 'பறவை அரசன்' என்ற அர்த்தமும் எளிய வகையில் ரசிகர்களுக்குப் புரியும். அதையும் தாண்டி அந்தப் பெயரின் புராண பின்புலத்தையும் கூடுதல் தகவல்களோடு விளக்கியுள்ளார் 2.0 கதை உருவாக்கத்திலும் வசனங்களிலும் பங்காற்றியுள்ள பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். தனது வலைத்தளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"பக்ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சம்ஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார்".
மேலும் அக்ஷய் குமாரின் பாத்திரம் குறித்து விளக்கியுள்ள அவர்,
"அது பறவையியல் நிபுணர் சலிம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம். சலிம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் தகவலாக அந்தக் கதாபாத்திரம் முதலில் நடிகர் கமல்ஹாசனுக்காக உருவாக்கப்பட்டது எனவும் அதை மனதில் வைத்து சில விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டதெனவும் குறிப்பிட்டுள்ளார்.