பொருளாதார சுமையிலிருந்து மீள்வதற்காக முழு நேரமாக வேலையிலேயே மூழ்கிய பெற்றோர்களால் கவனிக்கத் தவறி பாட்டி வீட்டில் இருந்து வளர்ந்து கஷ்டப்பட்ட பையனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
இந்த கவுன்சிலிங் எனக்கே மிகவும் சேலஞ்ஜிங்காக இருந்தது. கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வரும் ஒரு பெற்றோர் தன்னுடைய பையனை சிறு வயதிலிருந்து பாட்டியிடம் விட்டு விட்டு ஒன்றாக வேலைக்குச் சென்று இரவு தாமதமாக வந்துள்ளனர். பாட்டி வீட்டில் அந்த பையனின் சித்தி பசங்களும் இருந்து வந்தனர். அந்த பாட்டி இந்த பயனை மட்டும் திட்டுவது, அடிப்பது, சூடு வைப்பது, மற்றும் பையனின் பெற்றோர்களை தவறாக பேசுவது போன்ற பல மோசமான செயல்களை அந்த பையனுக்கு எதிராகச் செய்துள்ளார். அதே சமயம் அந்த பையனின் சித்தி பசங்களை பாசத்தோடு கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துள்ளார்.
இது அந்த பையனுக்கு ஆழமான மன வலியை ஏற்படுத்தி அவனது 19 வயது வரை தொடர்ந்துள்ளது. இப்போது அந்த பையனின் பெற்றோர்கள் எதோ ஒரு காரணத்தினால் தனிக்குடித்தனத்தில் உள்ளனர். இருந்தும் அவர்களின் பையன் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் பெற்றோர்கள் மீது எப்போதும் கோபத்துடனேயே இருந்துள்ளார். இப்படி இருக்கும் வேளையில்தான் அந்த குடும்பத்தினர் என்னை சந்திக்க வந்தனர்.
அப்போது நான் அந்த பையனிடம் பேசும்போது, பாட்டி வீட்டில் நடந்த சம்பங்களை சொன்னால் அதை கேட்கும் மனநிலையில் தன் பெற்றோர் ஒருநாளும் இருந்ததில்லை என்றும் அப்படியே கேட்டாலும் அதற்கு வளைந்து கொடுத்து அங்கேயே இரு எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று சொன்னதாக கூறினான். தொடர்ந்து அந்த பையனிடம் பேசும்போது 15 நிமிடத்திற்கு மேல் பேசமால் பயங்கரமாக கத்தி பெற்றோர்களை வரச் சொல்லுங்க என்று அழுது ரொம்ப கோபப்படுவான். சில நேரம் பெற்றோர்களை கோபத்துடன் என் முன்பே அவர்களை அடித்து காயப்படுத்தி இருக்கிறான். அந்தளவிற்கு ஆக்ரோசமாக நடந்துகொண்டான். தன்னையே அவன் உணர்ந்துகொள்ள அவனிடமுள்ள நல்ல பழக்கங்களை கேட்டால் கூட அவன் தெரியவில்லை என்றான். இந்த சின்ன விஷயத்தைகூட அவனால் சொல்ல முடியாமல் பழைய நினைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்.
தொடர்ந்து அந்த பையனிடம் பேசும்போது எனக்கு அப்பா, அம்மா ரொம்ப பிடிக்கும் ஆனாலும் அவர்கள் செய்த தவறுகளை உணராமல் இருக்கின்றனர். உங்களிடம் நிறைய பொய் சொல்கின்றனர் என்றான். இதையெல்லாம் கேட்டு அந்த பையனை ஹாஸ்டலில் சேர்க்க சொல்லிவிட்டேன். அதற்கு அவர்களின் பெற்றோர்கள் எங்களிடம், சரியான அன்பு கிடைக்காததால் தான் பையன் இப்படி இருக்கிறான் ஹாஸ்டலில் சேர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகும் என்றனர். அதற்கு நான், அவன் உங்களை பார்த்துதான் டென்சன் ஆகிறான். அவனுக்கு நண்பர்களும் இல்லை. அதனால் ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள் என்றேன். அங்கு சேர்ந்த பிறகு ஏற்கனவே சில மனநல மருத்துவரிடம் சென்று அவர்கள் சொன்ன சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு அங்கேயே இருக்கிறான். தொடர்ந்து ஹாஸ்டலிலுள்ள அவனது நண்பர்களுடன் அவன் எப்படி இருக்கிறான் என்று விசாரிக்கும்போது, சில நேரங்கள் அழுது கத்துவான் என்று கூறினர். இதைப் பற்றி அவனிடம் பேசும்போது கத்தனும் என்று தோன்றினால் வெளியே சென்று நல்லா மனசு விட்டு கத்து என்றும் சில தனிப்பட்ட அவனின் நல்ல விஷயங்களைப் பற்றி பேசி தொடர்ந்து அறிவுரைகளை கூறி வருகிறேன். இப்போது முன்னை விட கொஞ்சம் தேறி வருகிறான்.