அத்தியாயம்- 5
இயலாமை உச்சம் பெறும் போது கோபம் கொப்பளிக்கும். இதுதான் மனித இயல்பு.
தியாவை காப்பாற்ற முடியவில்லை என்ற இயலாமை, அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று அறிந்து கொள்ள முடியாத இயலாமை, எல்லாம் கவியிடம் கோபமாக வெடித்தது. அந்தக் கோபத்தோடு ஜோடி போட்டுக் கொண்டு அப்பாவின் அறைக்குச் சென்றாள் கவி.
அப்பாவின் அறைக்கதவை வேகமாகத் தள்ளித் திறந்தாள். "டமால்" என்று அவள் கோபத்திற்கு தாளம் போட்டது கதவு.
கவியைப் பார்த்ததும் லேப் டாப்பை மூடிவைத்துவிட்டு , "வாடா செல்லம்"என்றார். கூடவே, "சாரி டா செல்லம், முக்கியமான மீட்டிங் இருந்ததால் என்னால தியாவின் டெத்துக்கு வரமுடியலை.. ரொம்பவும் வருத்தமா இருக்கு. சின்னப் பொண்ணு. என்னடா ஆச்சு அந்தப் பொண்ணுக்கு? பாவம், நல்ல சூட்டிகையான பொண்ணு. ஏன் இப்படிப் பண்ணிக்கிட்டா?" என்று ஆதங்கத்துடன் கேள்விகளை அடுக்கினார் எஸ்.கே.எஸ்.
"என்னப்பா, இப்படிப் பேசறீங்க? அவளுக்கு நம்ம ஸ்கூல்லதான் எதுவோ நடந்திருக்கு. அங்கதான் அவளுக்கு என்னவோ பிரச்சனை. தற்கொலைக்கு முன்னாடி, ஸ்கூலை நெனைச்சி நடுங்கியிருக்காப்பா... தனக்கு என்ன பிரச்சனைன்னு, வெளியே சொல்லமுடியாத அளவுக்கு ஏதோ இருக்கு. அப்போ ஸ்கூல் தொடர்பா ஏதோ மர்மம் இருக்குப்பா. அவ சாவுக்கு யார் காரணம்ன்னு கண்டுபிடிக்கனும்பா"என்று ஆவேசத்தில் சந்திரமுகி ஆனாள் கவி.
"என்னாச்சு கவி உனக்கு? இப்படி ஆவேசமாகற, நம்ம பள்ளியை நாம் எப்படி கட்டுப்பாட்டோட நிர்வாகம் பண்றோம்ன்னு உனக்கும், ஊருக்கும் நல்லாவேதெரியும். அப்படி இருந்தும் ஸ்கூல்ன்னு சொல்றியே, ஸ்கூல்ல இருந்து வெளியில் போனபிறகு கூட அவள் பயப்படுற மாதிரி ஏதோ நடந்திருக்கலாம்ல. அவசரப்படாம விசாரிப்போமா." என்று மகளின் மனம் நோகக் கூடாது என்று பக்குவமாய் பாய் பின்னினார்.
"இல்லை பா, நான் நாளைக்கு பள்ளிக்குப் போய் விசாரிச்சிப் பார்க்கத்தான் போறேன்"என்று கவி திடமாகக் கூறினாள்.
"சரி, வாம்மா. நாளைக்கு நான் போகும் போதே உன்னையும் நம்ம ஸ்கூலுக்கு அழைச்சிக்கிட்டுப் போறேன்” என்றார் எஸ்.கே.எஸ்.
"நோ.. டாடி.. .நான் உங்க மகள்ங்கிற அடையாளத்துடன் போக விரும்பல. ஏதாவது காரணம் சொல்லி ஸ்கூலுக்குப் போய் விசாரிக்கிறேன். நீங்க மாரல் சப்போர்ட்டா இருந்தா போதும் டாடி” எனத் தைரியமாகச் சொன்னாள் கவி.
தியாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, சூரியனும் விரைந்து புறப்பட்டானா என்று தெரியவில்லை. காலைக் கதிர்கள் வெளிச்சம் பரப்பின.
கவி, ஷாலுவிடம் ”வர்ரியாடி, தியா படிச்ச ஸ்கூலுக்கு போய்ட்டு வரலாம்?”என்று அழைக்க,
“நான் ஒரு நாள் ஸ்கூல் போகலைன்னாலும், எங்க மிஸ் என்னை கிளாசுக்குள் சேர்க்கமாட்டாங்க” என்று பயந்து கொண்டு வரவில்லை என்றாள்.
அதனால், கவி மட்டும் தியா படித்த பள்ளிக்கு, அதாவது அவர்களின் பள்ளிக்குச் சென்றாள்.
வானளாவிய கட்டிடம். உள்ளே அங்கங்கே மரங்கள், பசுமையையும் நிழலையும் வளர்த்துக்கொண்டு இருந்தன.
வேலூர் ஜெயிலை விட மிக உயர்ந்த மதில் சுவர். கேட்டிற்கு உள்ளே இருந்த வாட்ச்மேன், பலமுறை கேட்டைத் தட்டிய பிறகு, அந்த குட்டிக் கதவைத் திறந்துகொண்டு யார் என்று எட்டிப் பார்த்தார்.
முகத்தில் அவர் மீசை மட்டும் பெரிதாகத் தெரிந்தது.
"நான் பிரின்சிபலை பார்க்கனும்" என்று பணிவாகக் கேட்டாள் கவி.
"யாரு பாப்பா நீ" ?என்று வாட்ச்மேன் பதில் கேள்வி கேட்டார்.
"அட்மிஷனுக்காக வந்திருக்கேன்"என்று மீண்டும் அதே பணிவு கவியிடம்.
"நீ மட்டும் தனியா வந்திருக்கியே பாப்பா. பேரண்ட்ஸ் வரலையா? ஸ்கூல்ல இருந்து உன்னை வரச்சொன்னாங்களா?”
”இல்லை. அட்மிஷன் பத்தி விசாரிக்கனும்”
”அட்மிஷன் எல்லாம் முடிஞ்சிடிச்சி. ஒண்ணு ரெண்டு சீட் இருக்கும். அதுக்கு ஏதேனும் லெட்டர் வச்சிருக்கியா" என்று ஒருமையில் கேட்டார் வாட்ச்மேன்.
"என்ன லெட்டர்,? எதுக்கு ?” என்றாள் கவி.
"இங்க பொதுவா அட்மிஷன் வேணும்னா, பெரிய ஆளுங்க, பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகளின் சிபாரிசுக் கடிதம் கேப்பாங்க" என்று விளக்கினார் வாட்ச்மேன்.
"அப்படி எதுவும் இல்லைன்னா.. இங்க அட்மிஷன் கெடைக்காது. அனாவசியமா பிரின்சிபலைப் பார்க்கமுடியாது." என்று சொல்லிவிட்டு குட்டி கேட்டை மூடிவிட்டார் வாட்ச்மேன்.
என்ன இது சாதாரணமானவர்களுக்கு இந்தப் பள்ளியில் இடம் இல்லையா? என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள் கவி.
டாடிக்கு போன் பண்ணி பிரின்சிபலிடம் சொல்லச் சொல்லலாமா? என்று ஒரு நிமிடம் நினைத்தாள். பிறகு நான் யாரென்று தெரிந்தால் இயல்பான விசயங்கள் மறைக்கப்படும் என்று நினைத்து வேண்டாம் என்று விட்டு விட்டாள் கவி.
அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல், வீட்டிற்குக் கிளம்பலாமா? என்று தனது வாகனமான டியோவிடம் நின்று யோசித்தாள்.
அப்போது என்பீல்டில் மூன்று இளைஞர்கள், மாடர்ன் என்ற பெயரில் தலையைச் சுற்றிலும் வரிவரியாகச் சுரண்டியும், நடுவிலும் முன் பக்கமும் முடியை அதிகம் வளர்த்தும் ஃபங்கி ஸ்டைலில் செம்பட்டை முடி வளர்த்திருந்தனர். அது ஆரோக்கியமாக அவர்களைக் காட்டவில்லை. வேகமாக கேட் அருகே வந்த அவர்கள், செல்போனில் யாரிடமோ என்னவோ கிசுகிசுத்துப் பேசினார்கள்.
உடனே வாட்ச்மேன் கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவர்களிடம் கையை நீட்டினார். பக்கில் வந்தவர்கள் ஏதோ ஒன்றை வாட்மேன் கையில் திணித்தனர். வாட்மேன் அதை வாங்கிக் கொண்டு வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்தினார்.
தியா அருகிலிருந்த மரத்தடியிலிருந்து இதை கவனித்ததை அவர்களும் வாட்ச்மேனும் பார்க்கவில்லை.
’இங்கு என்னவோ தப்பாக நடப்பதுபோல் இருக்கே?’ என்று கவி நினைத்தாள்.
(திக் திக் தொடரும்...)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்.... மரண முகூர்த்தம் #4