Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #20

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

maayapura part 20

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ஏறத்தாழ  70 ஆண்டு காலம் வாழக்கூடிய பறவை கழுகு.  தன் வாழ்நாளை இரண்டு பாகங்களாக அது பிரித்துக் கொள்ளும். கழுகின் அலகுகள், கூர்மையை  இழந்து வயோதிக தோற்றம் அடையும்போது, அதன் சக கழுகுகளே அதைக் கொத்தித் துன்புறுத்தும் என்பார்கள்.  அப்போது வாழ்வை வெறுத்த அந்தக் கழுகு எங்காவது உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று, தன் இறகுகளைத் தானே பிய்த்துவிடுமாம். மேலும் அது தன்னுடைய அலகை பாறைகளில் மோதி மோதி கூர்மையாக்கிக் கொள்ள முயற்சிக்குமாம். அதன் உடம்பெல்லாம் ரத்தமும் சதையுமாக அப்போது பார்க்கவே பயங்கரமாக இருக்குமாம். பின்னர் அது மலையின் குகையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக்கொள்ளுமாம். அந்த நிலையில் இரை தேடவும் செல்லாது. சில நாட்களுக்குப் பிறகு இறக்கை முளைத்து புதுப்பொலிவுடன் முழு வலிமையுடன் இளமைத் தோற்றத்தை மீட்டுக்கொண்ட பின்னரே மறுபடியும் அது வாழத் தொடங்குமாம். இதுதான் கழுகுகளின் கடினம் மிகுந்த வாழ்க்கைமுறை.

 

பெண்களின் வாழ்க்கையும் கழுகைப் போலதான். பாதி நாள் அம்மா வீட்டில் செல்லமாக இளவரசியாக ஒரு வாழ்க்கைமுறை. மறுபாதி நாட்கள், மாமியார் வீட்டில். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் வாழ்வியல் முறைகள் வேறு. கழுகு மாதிரி பொறுமையாக வலிகளைப் பொறுத்துக் கொண்டு, தன் உணர்வுகளைப் பதுக்கிக் கொண்டு சில நாட்கள் வாழ்ந்தால், அந்த குடும்பத்தில் அனைவரும் நம்மைப் புரிந்து கொண்ட பிறகு, மீதி நாட்களில் அங்கே இளவரசியாக வாழலாம். 

 

இப்படி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஜோதி, சங்கவிக்கு அறிவுரை சொல்வாள்.  அந்த கிராமத்தில் சிறியதாக ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. வீட்டிலிருந்து கொண்டே போஸ்ட் ஆபீஸில் வேலை செய்கிறாள் இந்த ஜோதி அக்கா. அந்த அக்கா தான் சங்கவியைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து இருந்தாள். 

 

அவளைப் பார்த்ததும் சங்கவிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. வறண்ட பாலையில் சுனைநீர் பார்த்த மகிழ்ச்சி. அன்புடன் வரவேற்றாள். மாமியாரிடம்  அறிமுகப்படுத்தினாள். வேண்டாவெறுப்பாக "வாம்மா" என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்த தங்கம், முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

வீட்டில் மற்றவர்களும் புதிதாக வந்த ஜோதியை  மரியாதைக்குக் கூட"வாங்க" என்று அழைக்கவில்லை. என்னவோ உயிரற்ற பொம்மை  எதிரே இருப்பதாக நினைத்துக் கொண்டு, அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஜோதியிடம் சங்கவியால் இரண்டு வார்த்தை சேர்ந்தார் போலப் பேச முடியவில்லை. தங்கம் கூப்பிட்டு ஏதாவது வேலை வாங்கிக் கொண்டே இருந்தாள்.  சங்கவி எதற்கும் சலிக்காமல் மகிழ்ச்சியாக முகத்தை வைத்துக்கொண்டு வேலைகளுக்கு நடுவே ஓடி ஓடி வந்து...” இதோ வந்துடறேங்கா...”என்று சொல்லிவிட்டுப் போனாள். மகிழ்ச்சியாக இருப்பதை விடவும், மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிப்பது ரொம்ப சுலபம். அதைத்தான் சங்கவியும் ஆஸ்கார் ரேஞ்சுக்கு செய்து கொண்டிருந்தாள்.

 

இவர்களுக்காக புவனா வேண்டுமென்றே வீட்டில் வேலை செய்யும் வேலை ஆட்களையெல்லாம், அதிகாரம் பண்ணிக்கொண்டு, அதன் மூலம் அந்த வீட்டில்  தனக்கும் அதிகாரம் பண்ணும் உரிமை இருப்பதாகக் காட்டிக்கொண்டு இருந்தாள். 

"அக்கா.. காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சொன்ன சங்கவியைக் கையைப் பிடித்து இழுத்து உட்காரச் சொன்னாள் ஜோதி. சங்கவியும் ஒப்புக்குத்தான் காபி போடுவது போலச் சென்றாள். தங்கம் ஏதாவது துடுக்காகச் சொல்லிவிடுவாளோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது சங்கவிக்கு. 

"சங்கவி என்னாச்சு உனக்கு?  ஏன் புலியிடம் சிக்கிய மான்குட்டி மாதிரி பயந்து பயந்து பார்க்குற? எதுக்கு மிரண்டு மிரண்டு பேசுற? எப்பவும் முற்றுப்புள்ளியே இல்லாமல் பேசுவியே, அந்த சங்கவி எங்கே?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் ஜோதி.

"அதெல்லாம் ஒன்னுமில்லை கா. நான் நல்லாத்தான் இருக்கேன்" என்று சொன்ன சங்கவி ’அக்கா எதுவும் கேட்காதீங்க’ என்பது போலக் கண்களால் கெஞ்சினாள்.

"அதை  விடு சங்கவி. இந்த பேப்பரை உன்னிடம் கொடுத்துவிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். உங்க அப்பாதான் இதைக் கொடுத்துட்டு வரச்சொல்லி ரொம்பவும் கேட்டுகிட்டார்” என்றாள் ஜோதி.

" என்னது கா..இது" என்று அந்தத் துண்டு பேப்பரை வாங்கினாள்.

"நம்ம அரசாங்கம் குரூப்-4 பரீட்சை நடத்துது. அதுக்கான அறிவிப்புதான் இது.  இதை உன் கிட்ட கொடுத்து, அதுல கலந்துக்கச் சொல்லும்மான்னு எங்கிட்ட சொன்னார். அதான் வந்தேன். நீ தான் பிளஸ் டூ வரை படிச்சிருக்கியே. இதை எழுதினால் ஏதாவது கிளார்க் வேலைக்குப் போகலாம். நீ நல்லா படிச்சு அரசு வேலைக்கு போகணுங்கறது தானே உன் ஆசை. ஆனா உன் விதி, டிகிரி படிக்க முடியாமல் போயிடுச்சு. இதை எழுதியாவது நீ  அரசாங்க வேலைக்குப் போகலாம்னு உங்கப்பா ஆசைப்படுறாரு சங்கவி" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாள் ஜோதி.

"பனை மரத்தில் மொந்தை கட்ட மாமரத்துல கல்லு வடிஞ்ச கதையா, கல்யாணமான பிறகு படிக்கப் போறாளாம் தங்காத்தா மருமகள்னு  ஊரு கண்டபடி பேசும்” என்று இதைக் காதில் வாங்கிய, கண்ணுசாமி மனைவி நாகம்மாள் நாக்கிலிருந்து விஷத்தைக் கக்கினாள்.

"அக்கா கல்யாணத்திற்குப் பிறகு பரீட்சை எழுதறதெல்லாம் சரிவராதுக்கா" என்று ஜோதியிடம் பாவமாகச் சொன்னாள் சங்கவி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியில் சென்றிருந்த அசோக் வீட்டிற்கு வந்தான். சங்கவி, அவனிடம் ஜோதியை அன்பொழுக அறிமுகப்படுத்தினாள்.  அசோக்கும் அன்பும் மரியாதையும் ததும்ப "வாங்க... வாங்க. உங்களைப் பத்தி சங்கவி நிறைய சொல்லி இருக்கு” என்று வரவேற்றான். 

 

பின்னர் அவனே, "உங்க ஊர்லேயே நீங்க மட்டும்தான் படிச்சவங்களாம்.  உங்க வீட்டில் மட்டும்தான் டிவி இருக்குதாம்.  பேப்பர்லாம் வருதாம். என்ன சிரமமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் குணமும் இரக்கமும் இருக்கணும்னு அடிக்கடி சொல்லுவீங்களாம்.” என்று வார்த்தைகளில்  "ஜிங் ஜக் " போட்டான் அசோக்.

" அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. ஏதோ என்னால முடிந்ததை செய்கிறேன்” என்று பவ்யமாகச் சொன்னாள் ஜோதி. 

”இப்பக் கூட என் வேலை கிடைக்கணும்ன்னு, நான் பரீட்சை எழுதுவதற்கு தான் சொல்லிட்டு போக வந்திருக்காங்க” என்று அப்பாவியாகச் சொன்னாள் சங்கவி.

"என்னது பரீட்சை எழுதப் போறியா? அதெல்லாம் வேணாம்.  பத்து  ஊரு ஜல்லிக்கட்டில் பாய்ந்து வரும் காளையை அடக்கி, பதக்கம் வாங்கியவன் நான். என் பொண்டாட்டிக்குக் கஞ்சி ஊத்த எனக்குத் தெரியும். பொட்ட புள்ள வேலைக்குப் போனா என் கவுரவம் என்ன ஆவறது?" என்று சொல்லி, அந்த பேப்பரை சங்கவியிடம் இருந்து பிடுங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு கோபமாகச் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான் அசோக்.

"என்ன இன்னும்  பேச்சு வேண்டிக்கிடக்கு.  உள்ள போய் வேலையைப் பாரு" என்று, சங்கவியை அதட்டினாள்  தங்கம்.

"வெளியே போ" என்று ஜோதியிடம் நேரடியாகச் சொல்லாமல், இப்படி முகத்தில் அடிப்பது போல அவள் பேசியது சங்கவிக்கும் ஜோதிக்கும் மனதில் வலியாக இருந்தது.

"சரி சரி சங்கவி. நான் வரேன்" என்று ஜோதி கிளம்பினாள். வாசல் வரை வந்த சங்கவி "இனி நான் கூப்பிடாமல், இனி இந்த வீட்டிற்கெல்லாம் வராதக்கா"என்று கண்ணீருடன் சொன்னாள்.

"சங்கவி, சிலரின் குணம் இதுதான். அதுக்காக எங்க ஊரு பொண்ணைப்  பார்க்க வராம இருக்க முடியுமா? நீ எப்பவும் எனக்குத் தங்கச்சிதான். அதுவும் செல்லத்தங்கச்சி. என் அப்பாவித் தங்கச்சி. உனக்கு சீக்கிரம் நல்லகாலம் வரும்." என்று வாழ்த்திவிட்டுக் கிளம்பினாள் ஜோதி. 

 

இந்தப் பேச்சு  சங்கவிக்கு ஆறுதல் தந்தாலும், அசோக் கோபப்பட்டு வெளியே போனதில்,  மனம் உலைநீர்  போலக் கொதித்துக் கொண்டிருந்தது. ’அன்பான கணவர் என்று நினைத்தேன். ஆணாதிக்கம் பிடித்தவரான இருக்கிறாரே’ என்று வேதனைப்பட்டாள். மாட்டுக்கொட்டகை பக்கம் வந்து மாட்டிற்குத் தண்ணீர் காட்டும்  சாக்கில் மாட்டிற்கு அருகிலேயே உட்கார்ந்து அழுதாள்.

"ஆளு அம்போட அம்பாரியில் இருக்கிறவனுக்குத் தெரியுமா?  கள்ளிக்காட்டு நெருஞ்சி முள்ளு, நெஞ்சில குத்துனா வலி"ங்கற மாதிரி சங்கவி ஏதேதோ நினைவுகளுடன் அழுது கொண்டிருந்தாள். அவள் அழுவதைப் பார்த்ததும் பசுவின் கண்ணிலும் கண்ணீர் வந்தது. "நீயாவது என் மேல பாசமா இருக்கியேன்னு"  அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள் சங்கவி.

 

வழக்கமாக ராத்திரி தண்ணீர் இறைக்கப் போகும் அசோக் போகாமல்  அவன் அறையிலேயே இருந்தான். இதைப் பார்த்ததும் மணிக்கு கோபமாக வந்தது. "அம்மா ..என்னமா இது. துரை தண்ணீர் இறைக்க போகலையாமா?" என்று குரலை உயர்த்திக் கேட்டான் மணி. 

"அம்மா.. இங்க சத்தம் போடுற வேலையெல்லாம் வேணாம். தண்ணீர் இறைக்க ஆளு ஏற்பாடு பண்ணியாச்சு"

" எதுக்கு தேவையில்லாத செலவு" என்று மணி கத்தினான். "மணி நீ பண்றது உனக்கே நியாயமா இருக்கா? உனக்கும் அவனுக்கும் ஒரே நாள்ல தானே கல்யாணம் ஆச்சு. அவன் மட்டும் ராத்திரியானா வயலுக்குப் போகணும். நீ உன் அறையிலேயே உன் மனைவியோட இருக்கணுமா?  கொஞ்சம் யோசிடா” என்று அப்பாக்காரர் செல்வம் பொறுமையாக எடுத்துக் கூறினார்.

"அப்ப இந்த வீட்டில் நான் வெட்டியாக இருக்கேனா?  நானே வயலுக்குப் போறேன்" என்று கோபமாக வயக்காட்டுக்கு கிளம்பினான் மணி. அந்த சமயத்தில் வேலு சித்தப்பா வாசலில் குரல் கொடுத்தார். "மணி நானே கொசப்பாளையம் வயலுக்கும் சேர்த்து இறைச்சிடறேன்  என் வயக்காட்டுக்கு பக்கத்துலதானே உங்க வயல் இருக்கு. பாவம் இப்பதான் கல்யாணம் ஆன சின்னஞ் சிறுசுங்க சந்தோஷமா இருங்க டா” என்று வாழ்த்திவிட்டுப் போனார். இருந்தாலும் அசோக்  முகத்தில் சந்தோஷம் மலர்ந்ததைப் பார்த்து, தானாக மணியின் காதில் புகை வந்தது. 

 

வேலையை எல்லாம் முடித்துவிட்டு கூடத்தில் படுப்பதற்குப் பாயை எடுத்து வருவதற்காக, அவள் அறைக்குச் சென்றாள் சங்கவி. அங்கே அசோக் வயக்காட்டுக்குப் போகாமல் இருப்பதைப் பார்த்தாள். தனிமை கிடைக்கும் போதெல்லாம் மொத்த காதலையும் கண்களில் கொண்டு வந்து அசோக்கைப் பார்வையிலேயே உருக விடுவது போலப் பார்ப்பாள். இன்று ஏனோ சங்கவியின் பார்வையில் லேசாக வெறுப்பு தென்பட்டது. 

"சங்கவி என் மீது கோபமா"? என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தான் அசோக்.

 

அசோக்கின் கையில் இருந்ததைப் பார்த்ததும் லேசாக அதிர்ந்தாள் சங்கவி.

 

(சிறகுகள் படபடக்கும்) 

 

 

சார்ந்த செய்திகள்