இறந்துபோன முதியவரின் காதலியை துப்பறிந்த கதை குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்
தன்னுடைய தந்தைக்கு திருமணத்தை மீறிய உறவும் அவர்களோடு தொடர்பும் இருக்கிறது என்றும், அதுபற்றி நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் கேட்டு எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த தந்தையின் வயது 80. இதைக் கேட்டவுடன் எங்களுக்கு அதிர்ச்சியானது. அவர் அப்போது உயிருடனும் இல்லை என்பது அடுத்த அதிர்ச்சி. அவருக்கு இன்னொரு குடும்பத்தின் மூலம் குழந்தைகள் இருக்கின்றனரா, அதன் மூலம் தங்களுக்கு சொத்து தொடர்பாக சட்ட சிக்கல் ஏதேனும் வருமா என்பதைத் தெரிந்துகொள்ளவே அதுபற்றி விசாரிக்கச் சொன்னார்கள்.
அந்த தந்தை சுயதொழில் செய்து வந்தார். அதனால் அடிக்கடி வெளியே செல்வார். சம்பந்தப்பட்ட நபர் உயிரோடு இல்லாததால், அவருடைய போன் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி நாங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டோம். தன்னுடைய கடைசிக் காலம் வரை அவர் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார். அவருக்கு இன்னொரு உறவு இருந்தது உண்மைதான். கோவிட் காலத்தில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் அந்த உறவு தொடர்ந்தே வந்துள்ளது. அந்த உறவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் மொபைல் எண் மூலம் அவருடைய விலாசத்தைக் கண்டுபிடித்து அவரைப் பின்தொடர்ந்தோம். 15 வருடங்களுக்கு முன்பிருந்து இந்தத் தொடர்பு அவருக்கு இருந்துள்ளது.
அந்தப் பெண்ணின் அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அவருடைய வீட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்தப் பெண்ணின் வீடு. கொரோனா காலம் பலருடைய வாழ்க்கையை மாற்றியது போல் அவரையும் வீட்டில் உட்கார வைத்தது. இன்னொரு உறவின் மூலம் அவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். இறந்த ஒருவர் பற்றி விசாரணையில் இறங்கிய சம்பவம் எங்களுக்கே புதிதாக இருந்தது. ஆனால் அந்தக் குடும்பத்தின் கவலையும் நியாயமானதாகவே இருந்தது.
குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் மீது பெற்றோரால் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் பெற்றோருக்கே வந்து சேரும் என்று சமீபத்தில் நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே தங்களுடைய காலத்துக்குப் பிறகே தங்களுடைய சொத்துக்கள் பிள்ளைகளைச் சேரும் என்று பெற்றோர் எழுதி வைப்பது தான் புத்திசாலித்தனம்.