முதல் பெண் துப்பறிவாளரான மாலதி அவர்கள் தன்னுடைய துப்பறியும் பணியில் நேர்ந்த அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
துப்பறியும் பணி எனக்கு மகிழ்ச்சியான ஒன்று தான். அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். போர் அடிக்கும் வேலைகளைத் திரும்பத் திரும்ப செய்வதை விட ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தரும் துப்பறியும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணம் தொடர்பான பல வழக்குகளை நாங்கள் கையாளுகிறோம்.
1993 ஆம் ஆண்டு முதல் நான் இந்தப் பணியில் இருக்கிறேன். அப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பு ஒருவரைப் பின்தொடரும் வழக்குகள் தான் அதிகம் வரும். இப்போது திருமணத்திற்குப் பிறகு பின்தொடரும் வழக்குகள் அதிகம் வருகின்றன.
ஒருமுறை ஒரு பெண் அவருடைய கணவரை உளவு பார்க்குமாறு கூறினார். ஆன்லைன் விளையாட்டில் பணம் செலுத்தி யாரிடமோ தான் மாட்டிக்கொண்டதாகவும் அதனால் விவாகரத்து வேண்டும் என்றும் கணவர் கூறுவதாகக் கூறினாள் அந்தப் பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக விவாகரத்து செய்துவிட்டு அவர் வெளிநாடு தப்பிச் செல்வதாகத் திட்டம் என்று கூறினார். அவரை நாங்கள் பின்தொடர்ந்த போது தான் தெரிந்தது அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அவளோடு வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்துகிறார் என்றும். அதன் பிறகு பலவாறு முயன்று அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.
டெக்னாலஜியின் வளர்ச்சியால் நன்மையும் தீமையும் சம அளவில் இருக்கின்றன. நம்முடைய முகம் இப்போது எளிதாக வெளியே தெரிகிறது. முடிந்த அளவுக்கு யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் தான் நாங்கள் நடமாடுவோம். டெக்னாலஜி மற்றும் மனித அறிவு இணைந்து பயணிப்பதே சிறந்தது. 60 வயது தந்தையின் ஃபோனில் ஜிபிஎஸ்ஸை ஆன் செய்துவிட்டு அவரை உளவு பார்க்க மகன் கோரினான். ஆனால், அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் போனையே மாற்றினார். அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது அப்போது தான் தெரிந்தது.
வழக்கில் உளவு பார்ப்பதற்கு எந்த வயதினர் தேவையோ அந்த வயதினரை நாங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். சிறு வயதில் என்னுடைய பையன் கூட இதில் பணியாற்றியிருக்கிறான். மிகவும் சவால் நிறைந்த பணி என்றாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது.