Skip to main content

இராணுவத்தில் கஷ்டப்படும் கணவன்; துரோகம் செய்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 26

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Advocate Santhakumari's Valakku En - 26

 

ஆண்கள் சார்ந்து தான் நடத்திய வழக்குகளில் ஒன்றைப் பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விளக்குகிறார்.

 

சண்முகம் என்பவர் பற்றிய வழக்கு இது. ஒருநாள் என்னைப் பார்க்க ஒரு வயதான பெண் வந்தார். தன்னுடைய மகனுக்கு விவாகரத்து வேண்டும் என்று அவர் கேட்டார். சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்று நான் கூறினேன். தன்னுடைய மகன் ராணுவத்தில் வேலை செய்வதாக அவர் கூறினார். மகன் விடுமுறையில் வரும்போது என்னிடம் அழைத்து வரச் சொன்னேன். அவரும் விரைவில் வருவதாகச் சொன்னார். அவருடைய வீட்டுக்குப் பெண்ணின் தரப்பிலிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. வீட்டில் இல்லாததால் அவரால் அதை வாங்க முடியவில்லை.

 

பராமரிப்பு சம்பந்தமாக அவர் மீது அவருடைய மனைவி வழக்கு போட்டிருந்தார். ஆனால் மாதாமாதம் அவர் சரியாக பராமரிப்புக்கான பணத்தை அவருடைய மனைவிக்கு அனுப்பி வந்திருக்கிறார். எனவே இதைப் பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வாழவே விரும்பினார். தன்னுடைய மாமியார் தன்னை வரதட்சணைக் கொடுமை செய்வதாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். வீட்டையும் மாமியார் தர மறுக்கிறார் என்று அவர் கூறினார். 

 

மாமியாரிடம் விசாரித்தபோது தன்னுடைய மருமகளுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறினார். குழந்தையைப் பார்க்க சண்முகம் முயற்சித்தபோது அவள் மறுத்தாள். போலீசின் துணையுடன் ஒருவழியாக அவர் தன்னுடைய குழந்தையைப் பார்த்தார். அந்தப் பெண்ணோடு தொடர்பில் இருந்தவர் ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் தன்னுடைய அடியாட்களோடு வந்து ராணுவ வீரரை மிரட்டினார். மன உளைச்சலில் சண்முகத்தின் குடிப்பழக்கம் அதிகமாகியது. 

 

அவளுக்காக அதற்கு முன் அவர் நிறைய பணம் செலவு செய்திருந்தார். ஆனால் எதுவும் திரும்ப வரவில்லை. தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் குடிக்கு அடிமையானார். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவளோடு இனி வாழ்வது நடக்காத காரியம் என்பதை அவர் உணர்ந்தார். நீதிமன்றத்தின் ஆலோசனையால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டைக் கொடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சட்டம் என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமான ஒன்றுதான். பெண்கள் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் என்பதால் சில நேரங்களில் சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.