16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.
போட்டி முடிந்த பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “நான் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம். ஆனால், இந்த ஆண்டு நான் எங்கு சென்றாலும் என் மீது காட்டப்பட்ட அன்புக்கு என்னால் சொல்ல முடிந்தது நன்றி மட்டும்தான். கடினமான விஷயம் என்ன என்றால் இன்னும் கடினமாக உழைத்து அடுத்து ஒரு சீசனிலாவது விளையாட முயற்சிக்க வேண்டும். இது, தான் நான் ரசிகர்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்க முடியும். இது சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தியதற்காக அவர்களுக்காக செய்ய வேண்டிய ஒன்று. நான் முதல் போட்டியில் விளையாட வந்தபோது ரசிகர்கள் என் பெயரை சொல்லி அழைத்தபோது என் கண்களில் நீர் திரண்டது. அதுபோல் தான் சென்னையில் கடைசி லீக் போட்டியும் இருந்தது. ஆனால் இதில் என்னால் என்ன முடியுமோ அதை செய்து மீண்டும் விளையாட வருவதே நல்ல விஷயமாக இருக்கும்.
நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். எனது கிரிக்கெட்டில் மரபு ரீதியிலான (ஆர்த்தோடாக்ஸ்) பண்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவர்களும் அந்த வழியிலேயே விளையாட முயல்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் என்னுடன் அதிகம் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு கோப்பையும் சிறப்பான ஒன்றுதான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்களது பந்துவீச்சு இன்று சரியாக அமையவில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் அழுத்தமான சூழ்நிலையை வித்தியாசமாக எதிர்கொண்டார்கள். ரஹானே உட்பட சில வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே அவர்களைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
களத்தில் இருக்கும்போது 100% உழைப்பையும் ராயுடு கொடுப்பார். அதுதான் அவரிடம் சிறப்பானதே. அவர் மிகச்சிறந்த வீரர். இந்தியா ஏ சுற்றுப் பயணத்தில் இருந்து நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகிறேன். சுழலையும் வேகப்பந்து வீச்சையும் சமமாக எதிர்கொள்ளும் வீரர்களில் அவரும் ஒருவர். உண்மையிலேயே இது மிகச் சிறப்பான ஒன்று. அவரும் என்னைப் போலவே செல்போனை அதிகம் பயன்படுத்துபவர் அல்ல. ராயுடு வாழ்வின் அடுத்தகட்டத்தை மிக சந்தோசமாக வாழ்வார் என நம்புகிறேன்” என்றார்.