கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் 'ஸஃபார் சர்ஃபராஸ்' உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரசால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 96 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் 'ஸஃபார் சர்ஃபராஸ்' உயிரிழந்துள்ளார். 1988-ல் கிரிக்கெட்டில் அறிமுகமான 'சர்ஃபராஸ்', கரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயது 'சர்ஃபராஸ்' சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.