கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி - 20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி நேற்று (28.07.2024) இரவு முதல் டி - 20 போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 58 ரன்கள் குவித்தார். அதே போன்று சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் ஆகியோரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இதனால் இலங்கை அணிக்கு 214 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
அதே சமயம் இந்த போட்டியில் அபாரமாகப் பந்து வீசி இலங்கை வீரர் பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இருப்பினும் இலங்கை அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்களையும், அக்சர், அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் 58 ரன்கள் விளாசிய கேப்டன் சூர்யகுமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி - 20 தொடரில் இந்தியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி - 20 போட்டி பல்லேகலே மைதானத்தில் இன்று (28.07.2024) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.