உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பந்தை தடுக்க முற்பட்டபோது, ஹர்திக் பாண்ட்யா கால் இடறி கீழே விழுந்தார். இதனால் காயம் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே பேட்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு வந்த அவருக்குச் சரியாகப் பந்து வீசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “உலக கோப்பை தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் விளையாட முடியாது என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை; போட்டிகளில் விளையாட முடியவில்லை என்றாலும், ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அணியுடன் இருந்து வீரர்களை உற்சாகப்படுத்துவேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இந்த அணி சிறப்பானது; நிச்சயம் அனைவரையும் பெருமைப்படுத்துவோம்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.