வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வங்கதேசம் வென்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் இன்று சட்டோகிராமில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. நிதானமாக ஆடிய கிஷன் 85 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் பின் வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் 126 பந்துகளில் 200 ரன்களை அடித்து அசத்தினார்.
இஷான் கிஷன் உடன் கைகோர்த்து ஆடிய விராட் கோலியும் தனது 44 ஆவது சதத்தை அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஸர் படேலின் அதிரடியில் இந்திய அணி 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை குவித்தது.
410 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் மட்டும் சற்று ஆறுதல் அளித்து ஆட எஞ்சிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் வங்கதேச அணி 34 ஓவர்களில் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களையும் லிட்டன் தாஸ் 29 ரன்களையும் யாசிர் அலி 25 ரன்களையும் எடுத்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும் அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி 300 சதங்களைப் பதிவு செய்து இந்திய அணி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்திய அணி சார்பில் 100 ஆவது சதத்தை கபில்தேவும் 200 ஆவது சதத்தை கங்குலியும் 300 ஆவது சதத்தை விராட் கோலியும் அடித்துள்ளனர்.