வேலை செய்துகொண்டிருக்கும் போதும் சரி, நாள் முழுக்க வேலை செய்து களைத்து வீட்டுக்கு வந்து அமரும்போதும் சரி, முதுகுப் பகுதியில் வலி ஏற்படுகிறது. முதுகு வலி ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையே முடக்கும் வலிமை கொண்டது. முதுகு வலி ஏன் ஏற்படுகிறது என விளக்கம் அளிக்கிறார் முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.
முதுகு வலி என்பது இன்று பலருக்கு இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் பேருக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. முதுகு வலி என்பது தனியாக ஏற்படும் நோய் என்று கருதக்கூடாது. அது பலவித நோய்க்கான முதல் அறிகுறி. முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன் எதனால் முதுகு வலி ஏற்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் பொதுவான ஒரு சிகிச்சையை எடுத்துக் கொள்வது பயன் தராது.
சாதாரண காரணம் முதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் காரணம் வரை முதுகு வலி வேறுபடும். பெரும்பாலான மக்களுக்கு சாதாரண காரணங்களுக்காகவே முதுகு வலி ஏற்படுகிறது. மிகச் சிலருக்கே அவை பயங்கரமான நோய்க்கான அறிகுறியாக அமையும். சிலருக்கு இரத்த சோகையினால் முதுகுத்தண்டு, எலும்பு, தசை நார்கள் போன்றவற்றிற்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜனின் அளவு குறையும்போது முதுகுப் பகுதியில் லேசான வலி ஏற்படும்.