'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் அருண் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உயிருக்கு ஆபத்து என்றால் கூட யாரும் உணர்வதில்லை. ஆனால், ஒரு நான்கு அல்லது ஐந்து முடி உதிர்ந்துவிட்டாலே ஏதோ ஒரு பெரிய வியாதி நமக்கு இருக்கிறது. நாம் வழுக்கையாகப் போகிறோம். நமக்கு கல்யாணம் ஆகாது என்று நினைக்கக்கூடிய இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். முடி உதிர்தல் ஏற்படும் ஆண்கள், பெண்கள் பெரிய மன அழுத்தத்துடன் வருவார்கள். அப்படி தான் சமூகம் முடி உதிர்தலை உருவாக்கி வைத்திருக்கிறது. உண்மையிலே முடி உதிர்தல் அப்படி ஒரு பிரச்சனையா என்றால் இல்லை.
முடி உதிர்வது இயல்பானது. ஒரு நாளை 50 முதல் 100 முடி வரை இயல்பாக உதிரும். கண்ணுக்கு தெரியாமலே உதிரும். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நமது குடும்பத்தில் பரம்பரையாக வழுக்கை இருக்கிறது என்றால், நமக்கு 25-லிருந்து 30 வயது ஆகும் போது முடி உதிர ஆரம்பிக்கும். உடல் சூடு அதிகரித்தல், சத்துக் குறைபாடு, தொழில் காரணமாக இருக்கலாம். இல்லை, மன அழுத்தமே காரணமாக இருக்கலாம். முடி உதிர்தலைச் சரி செய்வதற்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கிறது. பரம்பரையாக வழுக்கை விழுவதைத் தடுக்க முடியாது. அதை சில காலங்களுக்கு ஒத்திப் போடலாம்.
வழுக்கையில் முடி வளருமா என்றால் வளராது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தளவில், முடி உதிர்வதற்கான காரணம் தெரிந்தது என்றால், அதைக் குணப்படுத்துவதற்கு உண்டான வழியைப் பார்க்கலாம். தைலம் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை தலையில் தேய்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை இல்லை. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளித்த பின், தலையை நன்றாக தேய்த்து தேங்காய் எண்ணெய்யை வைத்து தேய்க்க வேண்டும். முடி உதிர்ந்தால் நீங்கள் செய்ய வேண்டியது தலையில் எண்ணெய் தேய்ப்பது தான்.
தேங்காய் எண்ணெய் உடல் சூட்டை இயல்பான நிலையில் வைக்க உதவும். முடி உதிர்தல் சம்பந்தமான பிரச்சனைக்கு தினமும் காலை, இரவு கரிசாலை பொடியை தேனில் கலந்து சாப்பிட வேண்டும். முடி உதிர்தல் குறித்து பயப்பட தேவையில்லை. இயல்பான ஒன்று தான். அதை நம்மால் சரி செய்து கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.