பில்லி, சூனியம், செய்வினை, பேய் பிடித்தல், சாமி ஆடுதல் ஆகியவற்றிற்கு பின்னே இருக்கும் அறிவியல் காரணங்களை மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்
நம்பிக்கை என்பது ஆதாரப்பூர்வமானவை; மூட நம்பிக்கை என்பது ஆதாரமற்றவை, இருந்தாலும் மக்கள் அதை நம்புவார்கள். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டிற்கும் சிறிய வித்தியாசம் தான். மழை மேகத்தைப் பார்த்து மழை வரப்போகிறது என்றால் அறிவியலின் துணையுடனான நம்பிக்கை. காக்கா கத்தியது, அதனால் மழை வரும் என்பது மூடநம்பிக்கை சார்ந்தது.
டாக்டர்கள் எப்போதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. இந்த ஆஸ்பிட்டல் இருக்கிறது, இங்கே கிளினிக் இருக்கிறது என்பதை சொல்லலாம்; ஆனால் இந்த டாக்டர் இந்த நோயை குணப்படுத்திவிடுவார் என்று விளம்பரப்படுத்தக் கூடாது என்பது மருத்துவத் துறையில் பின்பற்றப்படும் விதி. ஆனால் தொலைக்காட்சிகளில் பில்லி, சூனியத்திற்கு எல்லாம் தீர்வு தருகிறோம் என்று விளம்பரப்படுத்தி தொடர்பு எண் தருவார்கள். இதெல்லாம் ஒரு வகை மனநோய் தான். இவர்களால் அதை சரி செய்ய முடியாது ஆனால் விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். முறையான மனநல மருத்துவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.
இப்போது பில்லி சூனியம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஏதோ ஒரு வகையான சக்தியின் துணைகொண்டு மற்றொருவரை நாம் ஆட்டிப்படைக்க முடியும் என்கிறார்கள். ஆனால் இதை மனநல மருத்துவத் துறையில் ஸ்கீசோபெர்னியா (மனச்சிதைவு) மனநோயில் டெலூசினல் கண்ட்ரோல் என்கிறோம். நமது சிந்தனைகளை யாரோ குறுக்கிட்டு அவர்களுடைய சிந்தனையை நமக்கு திணிக்கிறார்கள் என்ற சிந்தனை வரும். இது ஸ்கீசோபெர்னியா நோய் அறிகுறியாகும். இதை பில்லி சூனியம் என்று நம்பி போலியான சாமியார்களை நம்பி ஏமாறுபவர்கள் இருப்பார்கள்.
செய்வினை வைப்பது என்பார்கள் அதாவது யாரோ ஒருவர் நமக்கு பிடிக்காதவர்கள் நம்மை நல்லபடியாக வாழக் கூடாது என்று செய்வினை வைத்து விட்டார்கள் என்று நம்புவார்கள். அதனால் அவர்கள் சோர்வாகவே இருக்கிறார்கள், ஒழுங்காக சாப்பிடுவதில்லை, எடை குறைகிறார்கள், யாருடனும் பேச மாட்டேன் என்பார்கள். ஆனால் இது டிப்ரெசன் அறிகுறியாகும். பேய் பிடித்தல் என்பார்கள். இதை நாம் கன்வென்சன் டிஸ்ஸாடர் என்போம். நம்மால் சமூகத்தில் பல விசயங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. அழுத்தப்பட்டு இருப்போம். அதை இது போன்ற சமயத்தில் வெளிப்படுத்தி விடுவார்கள். அது தான் பேய்ப்பிடித்தல். இதே தான் சாமி வருவது ஆகும்.
இந்த பில்லி, சூனியம், செய்வினை, பேய்பிடித்தல், சாமி ஆடுதல் போன்றவற்றின் மீது அதிக மூடநம்பிக்கையைக் கொண்டு அதற்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், தனிப்பட்ட போலியான நபர்களை அணுகி பெரிய சிக்கலாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.