மழைக்காலங்களில் பெருகி வரும் டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...
பருவகால மாற்றத்தால் பருவ மழை சீக்கிரமாகவே வந்து விட்டது. இதை எதிர் பார்க்காமலேயே நாம் முன்னரே மழை நீர் வடிகாலுக்கான குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தோம். அது பெரிய சாலைகளிலும், தெருப்புற உட்சாலைகளிலும் மூடப்படாமலே இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிற நீரில் கொசு முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாகி அவை டெங்கு காய்ச்சல் நோக்கி இழுத்துச் செல்கிறது. அது போக நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்த பிறகு மாநகராட்சி தரப்பிலிருந்து விழிப்புணர்வை ஆரம்பித்தார்கள். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்சேரவில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
இரவில் மட்டுமே கடித்துக் கொண்டிருந்த கொசு, அதிகமாக பெருகி இப்போதெல்லாம் பகலிலேயே கடிக்கிறது. அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் சுற்றி இருக்கிற பழைய பொருட்களில் நீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கிய பொருட்களில் பிளீச்சிங்க் பவுடரை தெளித்து கொசு பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை வைத்து கொசு நுழைவை தடுக்க வேண்டும். இதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.