இந்திய எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மாநில வாரியாக நாவல், சிறுகதை என ஆளுமை மிக்க இலக்கிய படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகேயுள்ள புதுவெங்கரையாம் பாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு(67) வழங்கப்பட உள்ளது.
எளிய சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர் தொடக்கத்தில் மார்க்சிய அமைப்புகளோடுCPI(ML) தொடர்பில் இருந்தார். குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் இயக்கங்கள் நடத்திய பல்வேறு இயக்கங்களில் நேரடியாக பணியாற்றியவர். தொடர்ந்து அவர் அரசுப் பணியில் சிவகிரி, முத்தூர், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக எழுத்தராகப் பணிபுரிந்தவர்.
விருப்ப ஓய்வு பெற்று, முழுநேர இலக்கியவாதியாக காலச்சுவடு போன்ற இலக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சமூகத்தில் அறியப்படாத குரல்களாக வாழும் எளிய மக்களின் வாழ்வியலை அவருக்கே உரிய நவீன எழுத்து படைப்புகளாக உருவாக்கினார்; பல நாவல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது நாவல்கள் ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1980 முதல் எழுதிவரும் இவரின் ‘பலி’ என்ற சிறுகதை தொகுப்பு முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்கள் வாழ்வுக்காகப் போராடும் விளிம்பு நிலை மக்களின் துயரங்களை, எதார்த்தங்களைப் பாத்திரங்களாகச் சித்தரித்து நவீன இலக்கிய படைப்பாகக் கொடுத்தார்.
நொய்யல் நாவலுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் பொற்கிழி விருது பெற்றுள்ளார். கிராமங்களில் சாதிய சடங்குகளில் சிக்கி வாழும் குடிநாவிதர்களின் அவலங்கள், அவர்களது வாழ்வியல் நடைமுறைகள், சமூக உறவுகள் குறித்து இவர் எழுதிய ‘நீர்வழிப்படூஉம்’ என்கிற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவி பாரதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். 1980களில் தனது காத்திரமான படைப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். மறைந்த எழுத்தாளர்கள் கோமல் சுவாமிநாதன், கி. ராஜநாராயணன் போன்ற இலக்கிய ஆளுமைகள் இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளார்கள். இடதுசாரி இலக்கியவாதிகள் மத்தியில் இவரது படைப்புகள் பாராட்டும் பல விமர்சனங்களும் பெற்றுள்ளது.
‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ என்னும் அவரின் உரைநடைத் தொகுதி அரசியல் விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். ‘நிழலின் தனிமை’ புதினத்தில் தேவி பாரதி கையாளும் மொழியும், பாத்திரப் படைப்புகளும் வாழ்வில் உண்மையின் பக்கம் நம்மை நெருங்கச் செய்பவை. தேவி பாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’ புதினம் சாதிய அடுக்குகளில் அடியில் கிடந்து புரளும் விளிம்பு நிலை மனிதர்களின் வலியை, நில உடைமை ஆதிக்கப் பண்பாட்டினைப் பாதுகாக்கும் சாதிய சடங்குகளில் சிக்குண்டு இன்னமும் மீள முடியாமல், கிராமப் புறங்களில் வதைபடும் சிறுகுடி நாவிதர்களின் சமூக உறவினை அப்பழுக்கற்றுப் பேசும் இந்நூலுக்குத்தான் சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. நமது வாசகரான நண்பர் தேவி பாரதிக்கு நக்கீரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.