கிருஷ்ணகிரி அருகே, வீரபத்திர சுவாமிக்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வெப்பாலம்பட்டியில் வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இந்த கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. முன்னதாக, அயலம்பட்டியில் இருந்து வீரபத்திர சுவாமியை சேவை ஆட்டத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
சக்தி அழைப்புக்குப் பிறகு, வாள், சாட்டையுடன் பக்தர்கள் பாரம்பரிய நடனமாடினர். இதையடுத்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், வீரபத்திரசுவாமி திருவீதி உலா நடந்தது. உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.