'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எத்தனை தான் பகுத்தறிவு பேசினாலும், எத்தனை தான் சுயமரியாதைப் பேசினாலும், எத்தனை தான் தன்னம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் ஒரு தடுமாற்றம் வரத்தான் செய்கிறது, சில நேரங்களில். கணவன் மிகப்பெரிய பகுத்தறிவாளனாக இருப்பான். மனைவி கரைகடந்த பக்தி உள்ளவளாக இருப்பாள்.
ஆச்சாரக் கோடுகளையும், நிர்ப்பந்த ஒப்பனைகளையும் கணவன் நிராகரித்து விடுவான். அவனுக்கு இதில் நம்பிக்கை இருக்காது. ஆனால், அவனுடைய மனைவிக்கு அதிலே நம்பிக்கை இருக்கும். அதனால் தான் இன்னிக்கு நீங்கள் காலையிலே தொலைக்காட்சியைப் பார்த்தால், ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் அவரவர்கள் ராசியைச் சொல்லி, நட்சத்திரத்தைச் சொல்லி இந்த நாட்டிலே பலன் சொல்லுகிறார்கள். இன்றைக்குக் காலையில 09.00 மணி வரைக்கும் நேரம் சரியாக இருக்காது. 09.00 மணிக்குப் பிறகு நீங்கள் புறப்பட்டால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். அப்படி என்று சொல்லி ஜோதிடர்களின் ஆட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் நாளும், கோளும், ராசியும், நட்சத்திரமும் பார்த்துத்தான் ஒவ்வொரு மனிதனும் இன்றைக்கு இயங்கிக் கொண்டு இருக்கான். ஆயிரம் தான் சொன்னாலும் ஆயிரம் பேசுவான். மகளுக்கு கல்யாணம் என்று சொன்னால் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று அவனே சொல்லுவான். இதை குறை என்றும் கூட நான் சொல்ல மாட்டேன். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றான் வள்ளுவன். ஜாதகத்தையெல்லாம் அனுப்ப முடியாது, எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று எந்த தகப்பனும் சொல்ல மாட்டான்.
நாளுக்காகவோ, கோளுக்காகவோ, கூற்றுக்காகவோ யாரும் அஞ்சாதீர்கள். குமரேசன் இருதாளை நினையுங்கள். நாளும் கோளும் உங்களுக்கு ஒத்துழைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையோடு சொல்லுகிறார் அருணகிரிநாதர். ஆகவே, வாழ்க்கையில் எது வழி மறித்தாலும், எந்த இடையூறு வந்தாலும், எந்த ஆபத்து வந்தாலும், எந்த சோதனை சுற்றுச் சுழன்றாலும் அதிலிருந்து கரை சேருவதற்கு முருகனுடைய தாளைத் தவிர நமக்கு வேறு மருந்தில்லை" எனக் கூறியுள்ளார்.