யோகி சிவானந்தம்
பிரபஞ்சம் முழுக்க விரவிப்பரவி புரவியாய்ப் பயணிக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடுகளையும், அது வழங்கும் உதவிகளையும் மனிதகுலம் உதாசீனப் படுத்தும்போது அதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும். அன்பு, கருணை, தர்மம், நீதி, நேர்மை, வாய்மை என அனைத்திற்கும் சொந்தக்காரர்களாக விளங்குபவர்கள் உலகின் மூத்தகுடிகளான தமிழ் மக்கள். உலகின் அனைத்து விஷயங்களையும்- அதாவது அணுவை அறிந்தது முதல் புவியீர்ப்பு மையசக்தியை உலகிற்கு அறிவித்தது என்று கூறிக்கொண்டே போகலாம். நமது உடலானது பிராணமய கோசம், அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து கோசங்களால் இயங்குகிறது. உலகில் அதாவது நமது எல்லையைத் தாண்டியிருக்கும் எந்த நாட்டவரும் முதல் நான்கு கோசங்களைக் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால் ஐந்தாவதாக உள்ள ஆனந்தமய கோசத்தை நாம் மட்டுமே உணரவும், அறியவும் முடியும். காரணம் நாம் பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ள பஞ்சபூத சக்தியை உணர்ந்தவர்கள்.
கடந்த இதழில் நிலத்திற்கு ஆதாரமான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். தற்போது நீருக்கு ஆதார ஸ்தலமான திருவானைக்கோவில் பற்றிய சிறப்புகளை அறிவோம். அதற்குமுன் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பஞ்சபூத சக்திகளில் ஒன்றான காற்றுக்கு கோபம் வந்தால் நம்மை அறைந்து வீழ்த்தும். நீருக்கு கோபம் வந்தால் நம்மைச் சுற்றியுள்ளதையும் சேர்த்துப் புரட்டிப்போட்டுவிடும். நிலத்திற்குக் கோபம் வந்தால் விழுங்கிவிடும். நெருப்புக்குக் கோபம் வந்தால் எரித்து சாம்பலாக்கிவிடும். ஆகாயத்திற்குக் கோபம் வந்தால் முகவரி இல்லாமல் அழித்தொழித்துவிடும். பிரபஞ்சம் முழுக்க விரவியிருக்கும் பஞ்சபூத சக்திகளின் ஆற்றலை ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்கவேண்டும்.பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீருக்கான தலத்தைப் பற்றி கடந்த மாதம் குறிப்பெழுதிக் கொண்டிருந்தேன். அப்போது கேரளாவில் நீர்சக்தி தனது வேலையைக் காட்டத்துவங்கியிருந்தது. இதனைப் புனரமைக்க யாரிடமும் கையேந்த வேண்டிய தில்லை. பத்மநாப ஸ்வாமி மனது வைத்தால் போதும். அதற்கு அன்பு, கருணை, பக்தி இவையெல்லாம் வேண்டும். நீரின் மகிமையை உணர, வாருங்கள் திருவானைக்கா செல்வோம்.
முன்பொரு சமயம் சுவேதகிரி எனும் மலையிலிருந்து ஜம்பு மரங்கள் நிறைந்த காட்டிற்குள் ஒரு யானை வந்தது. அது அங்கே ஒரு லிங்கத்தைக் கண்டது. ஈசனின்மீது கொண்ட பக்தியின் காரணமாக அருகிலிருக்கும் காவேரி ஆற்றின் நீரைத் தன் துதிக்கையினால் கொண்டுவந்து லிங்கத்திற்கு அபிஷேகம்செய்து, அருகிலுள்ள ஜம்பு மரத்தின் மலர்களாலும், பழங்களாலும் அர்ச்சனையுடன் படையிலும் நடத்தி வழிபட்டது. யானை தினசரி சிவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அதேபோல ஜம்பு மரத்திலுள்ள சிலந்தி ஒன்று இறைவன்மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தது. மழையாலும் வெயிலாலும் லிங்கத்திருமேனிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றெண்ணி தன் வாயிலுள்ள உமிழ்நீரைக் கொண்டு ஒரு வலையைப் பின்னியது. அச்சிலந்தி வலையில் ஜம்புமரத்தின் இலைகள் உதிர்ந்து விழுந்து ஒரு பந்தலைப்போன்று காட்சியளித்தது. அடுத்த நாள் ஈசனை வழிபட வந்த யானைக்கு லிங்கத்தின் மேலே இருந்த சிலந்தி வலையும், அதில் விழுந்த பழுத்த இலைகளும் குப்பைக்கூளமாகக் காட்சியளித்தன. அதைக்கண்ட யானை கடுங்கோபமடைந்தது. ஆவேசமாக தனது துதிக்கையால் சிலந்திக்கூட்டை சின்னாபின்னமாக்கியது. இதனைக் கண்டு கோபமுற்ற சிலந்தி யானையின் துதிக்கையில் நுழைந்து கடுமையாகக் கடிக்க ஆரம்பித்தது. ஆத்திரமடைந்த யானை துதிக்கையை மூர்க்கத்தனமாக சுழற்றி மரத்தில் அடித்தது. கடைசியில் இரண்டும் இறந்தேபோயின.
உமா மகேஸ்வரனின் அருளால் சிலந்தி உறையூரில் சோழ மன்னனாகப் பிறந்தது. யானை சிவனைப் பூஜித்ததால் இத்தலம் "திருவானைக்கா' என்றழைக்கப் படுகிறது. சோழ மன்னனாகப் பிறந்தவன்தான் கோச்செங்கணான் எனும் பெயர் பெற்றான். அவன் கட்டிய கோவில்தான் திருவானைக்கா திருத்தலமாகும். அவன் கட்டிய முதன்மையான மாடக்கோவிலும் (யானை உள்ளே செல்ல முடியாத) இதுதான். இந்தத் தலமானது திருச்சியை அடுத்து ஸ்ரீரங்கத்திற்கு அருகில் காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. கருவறையில் லிங்கத் திருமேனியைச் சுற்றிலும் எப்போதும் நீர் இருக்கும். இங்கே சுவாமி ஜலகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கருவறைக்கு முன்பாக நவ துவாரங்கள் இருக்கின்றன. அவற்றின்வழியாக சுவாமி தரிசனம் செய்யமுடியும். அம்பாள் இத்திருத்தலத்தில் அகிலாண்டேஸ்வரி எனும் பெயரில் காட்சியளிக்கிறாள். அகத்தியர், கௌதமர், தாயுமான சுவாமிகள், கச்சியப்ப முனிவர் என்று பலரும் இங்கே வழிபட்டிருக்கின்றனர்.
இங்கே தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணா மூர்த்தி என்ற பெயரில் அருள்பாலிக்கின்றார். உச்சிக்கால பூஜையை அம்பாளே செய்வதாக ஐதீகம். அதன் பொருட்டு கோவில் அர்ச்சகர் பெண் வடிவம்கொண்டு, மேளதாளம் முழங்க யானை சகிதம் வந்து ஜலகண்டேஸ்வரரை பூஜை செய்து வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த அப்புத் தலத்திற்கு ஒரு சிறப்புண்டு. அதாவது இத்தலமானது மிகவும் குளிர்ச்சியானது.உஷ்ணம் அதிகமாக உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட, அவர்கள் மனமும் உடலும் உஷ்ண சமன்பாடு அடையும். உஷ்ணம் சமன்பாட்டில் இருக்கும்போது உடலானது நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது. கோபம் குறைகிறது.உள்ளமும் உடலும் குளிரவும், வாழ்க்கைப் புதுப்பொலிவு பெறவும் பல்வேறு சிறப்புகள் அடங்கிய ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க திருவானைக்கா செல்வோம். வாழ்வின் உன்னதமான திருப்பு முனையைப் பெறுவோ