Skip to main content

சத்ரபதி சிவாஜி தரிசித்த ‘மண்ணடி காளிகாம்பாள்’

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

 Chhatrapati Shivaji visited Mannadi Kaligambal!

 

சென்னை பாரிமுனையின் அருகே மண்ணடி பகுதியில் பழமை வாய்ந்த காளிகாம்பாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றுள்ளார். இத்தகவலை அரசுக்கும், அவ்வாலய நிர்வாகத்திற்கும் சொன்னவர் மகாவித்துவான் வி. நடேசனார்.

 

மூதறிஞர் ராஜாஜியின் பரிந்துரையின்படி, வார்தா சென்று மகாத்மா காந்தியடிகளுக்குத் தமிழ் போதித்தவர் தமிழ்ப் பண்டிதர் வி. நடேசனார். இவர், 12 ஆண்டுக் காலம் சென்னை மாகாண கௌரவ ஜெனரல் நீதிபதியாக இருந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் ஜாகீர் உசேன், வி.வி. கிரி, ஜெயில்சிங், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களோடு நட்பும் தொடர்பும் வைத்திருந்தார்.

 

1969 முதல் 1974 வரை இவர் சென்னை காளிகாம்பாள் ஆலயத்தின் அறங்காவலராக இருந்துள்ளார். அச்சமயத்தில் தான், வரலாற்று நூல்களை ஆய்வுசெய்து மன்னர் சத்ரபதி சிவாஜி இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுள்ளார் என்ற செய்தியை அறிவித்தார். அதன்பின்னர் தான் இவ்வாலய தல வரலாற்றில் அச்செய்தி பதிப்பிக்கப்பட்டது.

 

இதுகுறித்து நடேசனார் 1974 ஆம் ஆண்டு ‘சுதேசமித்திரன்’ இதழில், ‘சத்ரபதி சிவாஜி தரிசித்த சென்னைக் காளியம்மன்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், “கடவுளது பெயரையே மக்களுக்கு இடும் வழக்கம் அன்று முதல் இன்று வரை உள்ளது. சென்னப்ப நாயக்கருக்குப் பெயரிடக் காரணமானவள் சென்னைக் குப்பத்தின் காளியம்மனே. இக்காளியம்மனுக்கு மீனவரும் பிறரும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி சென்னம்மன் ஆயினள்; செம்மேனியம்மான் சென்னப்பன் (சிவன்) என்றும், செந்நிறக்காளி சென்னம்மன் (சிவை) என்றும் போற்றினர். சிவாஜி மகாராஜா 3-10-1677ல் சென்னைக்கு வந்தார். ஸ்ரீனிவாசன் எழுதிய ‘கருநாடகத்தில் மராட்டியராட்சி' என்ற நூலின் 163 ஆம் பக்கம்தான் இதற்கு ஆதாரமாக உள்ளது.

 

கி.பி 1676 முதல் 80 வரை சென்னைக்குப்பம் மராட்டா டவுன் ஆனபோது, சிவாஜி மகாராஜா சென்னைக்கு விஜயம் செய்தார். இங்கு வருவதற்கு முன்பே பரங்கிப்பேட்டை, செஞ்சிக்கோட்டை, காஞ்சிபுரம் முதலியவற்றைப் பிடித்து வெற்றி பெற்றார். சிவாஜி வருகையைக் கண்டு ஆங்கிலேயரும் அலறினர். மதராஸ்குப்பத்தில் தாங்கள் கட்டிய கோட்டையில் பதுங்கியிருந்தனர். வெள்ளையர் யாவரும் ஒன்று திரண்டு எதிர்க்கவும் ஆயத்தமாயினர். சிவாஜியின் வீராவேசங்கண்டு பயந்தோடினர். எஸ்.டி. லவ் இயற்றிய சென்னை வரலாற்றில் இது உள்ளது.

 

சிவாஜி மன்னர் வழிபட்டு வந்த தேவி, பவானியே. அவர் சிவசக்தியை நம்பி வாழ்ந்தவர். எதையும் தேவியைக் கேட்டு செய்பவர். அவளும் அவர்தம் உள்ளத்திலிருந்து அவ்வப்போது உணர்த்துவாள். தேவியின் ஆணையை இதயவொலியாகக் கேட்டு நடந்ததால் சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பெருஞ்சக்தியை அணுசக்தியால் (பக்தி) வெற்றிகண்டார்.

 

சிவாஜி மன்னர் தேவியை தரிசித்தல் வழக்கம். அவர்தம் ஒழுகலாற்றுக்கேற்ப சென்னை வந்தபோது, மராட்டிய தட்டாரால் பூசை செய்யப்பட்ட இச்சென்னம்மனை (சென்னைக் காளியை) வணங்கித் தங்கினார். பொன் செய்க் கொல்லரிடமும் பரிவுகாட்டிக் கோவிலுக்கு வேண்டியன அளித்தார் எனக் கர்ண பரம்பரைச் செய்தியுண்டு. இச்சென்னம்மன் பெயரே ராஜ்யத்துக்கும் தலைநகர்க்கும் பெயராயிற்று. (சென்னையம்மன் குப்பமே சென்னை மாநகரமானது).

 

இவள்தம் அருளால் தோன்றிய மக்களுக்குச் சென்னம்மன், நாயக்கன், சென்னப்பன், சென்னம்மா என பக்தர்கள் தம் குழவிகளுக்குப் பெயர் சூட்டினார்கள். சிவாஜி காலத்திலும் இவ்வாலயத்தில் ஓடிய கிண்ணித்தேர் (ஸ்ரீசக்கர ரதம்) வெண்கலத்தாலானது. இது 400 ஆண்டுகளாக உள்ளது. ஆங்கிலேயர் இதை வெண்கலக் கோப்பை ரதம் என்றனர். சென்னை ராஜ்ய முதல் கவர்னர் இத்தேரோட்டத்தை, வலக்கை, இடக்கை சாதியினர் பிணக்கால் நிறுத்தினார். இரண்டாம் கவர்னர் இதனை ஓட்ட உத்தரவிட்டு மகிழ்ந்தார்.

 

31-5-74-ல் 300 ஆவது ஆண்டு சிவாஜியின் மகுடாபிஷேக விழாவும், கோபூஜையும், தேரோட்டமும், பொதுக்கூட்டமும் இக்கோவிலில் நடந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

“மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வழிபட வந்துள்ளார். ‘யாதுமாகி நின்றாய் காளி' என்ற அவரது பாடலில் வருவது இக்காளிகாம்பாள் தான் என்பதையும் நடேசனார் அறிவித்தார்'' என்கிறார் அவரது மகன் ஸ்ரீகந்தவேள். தந்தை நடேசனார் மறைந்த பின்னர், அவர் வாழ்ந்த சென்னை சூளை வீட்டிலேயே வசித்து வரும் ஸ்ரீகந்தவேள், காளிகாம்பாள் ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் உள்ளார். இவர், “காளிகாம்பாள் பற்றி நிறைய பாடல்களை புனைந்துள்ளார் அப்பா. அவற்றையெல்லாம் தனிப் புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளார்'' என்கிறார்.