கண்களை மூடி கடவுளிடம் வேண்டிய காலம் போய், தற்போது கண்ணுக்கு தெரியாத கொடியவன் கரோனா வைரஸிடம், என்னிடம் வந்துடாதே என மனிதகுலம் வேண்டும் காலம் வந்துவிட்டது. உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக அளவில் 78,59,557 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,168 ஆக உள்ளநிலையில், 40,35,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் 25,302 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 21,42,224 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 702 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,17,527 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் இன்று ஒரே நாளில் 20,894 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 8,50,796 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவுக்கு ஒரே நாளில் 890 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 42,791 ஆக உயர்ந்துள்ளது.