ட்விட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர்களில் ஒருவரான இவான் வில்லியம்ஸ், தான் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ட்விட்டர் நிறுவனம். இதில் 2008 முதல் 2010 வரை இவான் வில்லியம்ஸ் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவான் வில்லியம்ஸ், “ட்விட்டர் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக ட்விட்டர் போர்டில் பணியாற்றி வந்தேன். மிகவும் ஆர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சவால் நிறைந்ததாகவும் எனது பணி இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து முழுமையாக வெளியேறுவார் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவரின் பதவி விலகுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜாக் டோர்சே (Jack Dorsey) “இனி நமது நிர்வாகக்குழு உரையாடலில் உங்கள் குரல் இல்லாமல் வெற்றிடமாக இருக்கப்போகிறது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.