முருகனுக்கு நடத்தப்படும் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்று தைப்பூசம். தைமாதம் பௌர்ணமி தினத்தில் பூசம் நட்சத்திரம் வரக்கூடிய தினமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தைப்பூசமானது தமிழகம் தவிர தமிழர் வாழும் உலகின் மற்ற பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமிழர் அதிகம் வாழும் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தைப்பூசம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இருநாடுகளும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் நிலையில் மலேஷியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று முருகனை தரிசித்தனர். தமிழர்கள் மட்டுமின்றி மலேசிய நாட்டு மக்களும் பெரும் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர். தைப்பூசத்தையொட்டி மலேசிய நாட்டில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்துமலை கோவிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.