ரோஹிங்யா முஸ்லீம்களை விரட்டிவிட்டு அவர்களின் கிராமத்தில் மியான்மர் அரசு ராணுவத் தளவாடங்களை அமைத்துவருவதாக ஆம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.
மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது மியான்மர் பாதுகாப்புப் படை. இந்தத் தாக்குதலில் ராக்கைன் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சம் ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்தின் எல்லைகளை நோக்கி தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், ரோஹிங்யா முஸ்லீம்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்த வீடுகள் மற்றும் மசூதிகளை மியான்மர் ராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டதாகவும், அந்தப் பகுதிகளில் ராணுவ தளவாடங்களை கட்டமைத்து வருவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக கூகுள் நிலவரைபடங்களை ஆம்னெஸ்டி முன்வைக்கிறது. அதன்படி, முந்தைய வரைபடங்களோடு ஒப்பிடும்போது பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக அது தெரிவிக்கிறது.
மியான்மர் அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூசி அல்லது மற்ற உயர்பதவியில் இருக்கும் யாவரும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் திரும்பிவரும் ரோஹிங்யாக்களுக்காக அவர்களது கிராமங்களைப் புதுப்பித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.