"இந்தியர்கள் அனைவரும் கீவ்வை விட்டு வெளியேறிவிட்டனர். எங்களிடம் உள்ள தகவலின்படி, நமது நாட்டினர் யாரும் கீவ்வில் இல்லை. கீவ்வில் இருந்தும் இந்தியர்கள் யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை" என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாங்கள் குடும்பத்துடன் கீவ் நகரில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் கூறி இந்தியர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், மருத்துவரான தனது மனைவி மயூரி மோகன் மற்றும் இரண்டு குழந்தைகளோடு கீவ்வில் சிக்கித் தவிப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டதாகப் புதுதில்லியில் கூறப்பட்டதை அறிந்ததும் நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். நாங்கள் கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டோம். ஆனால், தூதரகம் எங்களைக் காத்திருக்கச் சொல்லிக்கொண்டே இருந்தது. நான்கு நாட்களாக குண்டுவெடிப்புகள் நடந்தன. கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் அமைதி நிலவினாலும், தற்போது மீண்டும் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. குளிரும் கூடிக்கொண்டே போகிறது... நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்துதான் அரிசி எடுத்து வருகிறோம். என்னிடம் பணம் கூட இல்லை... உள்ளூர் மக்கள் தான் எங்களுக்கு உதவுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள ராஜ்குமார், "இந்தியாவில் உள்ள ஒரு தலைவரைத் தொடர்பு கொண்டோம். அவருக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆனால், இப்போது எங்கள் குடும்பம் நம்பிக்கையை இழந்துவிட்டது. சொந்தமாகத் தலைநகரை விட்டு வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் துப்பாக்கியை எடுத்து ரஷ்யப் படைகளுக்கு எதிராகச் சண்டையிடச் சொன்னார்கள் இங்குள்ள மக்கள். ஆனால், நான் அதனைச் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.