கரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது இந்தியா.
உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால், இதுவரை 2 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர், 7.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 53 லட்சம் பேர் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் முறையே பிரேசில் மற்றும் இந்தியா உள்ளன. அதேபோல கரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸால் இதுவரை 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. நான்காவது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.