Skip to main content

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோட்டம்?

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
Bangladesh Prime Minister Sheikh Hasina escape

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வங்கதேசம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேசம் முழுவதும் கலவரம் பரவியதால் 100 மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் போராட்டக்காரர்கள் கோனோ பாபனின் கதவுகளைத் திறந்து இன்று (05.08.2024) பிற்பகல் 03:00 மணியளவில் பிரதமரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைந்ததாக வங்க தேசத்தின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று மதியம் 02:30 மணியளவில் பங்கபாபனில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவுடன் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில் இன்னும் சற்றுநேரத்தில் மக்களிடம் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உரையாற்ற உள்ளார். ஷேக் ஹசீனா பின்லாந்து, இந்தியாவின் மேற்கு வங்கம், அகர்தலா போன்ற ஏதாவது ஒரு பகுதியில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்