தந்தையின் விடாத முயற்சியால் 24 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று வயது சிறுமியாக தொலைந்துபோன மகள் தற்போது திரும்பிவந்துள்ளார்.
சீனாவின் சிச்சுவான் பகுதியைச் சேர்ந்தவர் வாங் மிங்க்விங். அவரது மனைவி செங்டூ. இவர்களது மூன்று வயது மகள் 1994ஆம் ஆண்டு மிங்க்விங் நடத்திவந்த பழக்கடையில் இருந்தபோது காணாமல் போனார். குழந்தை தொலைந்துபோன துயரத்தில் இருந்த மிங்க்விங் தம்பதி காவல்துறையில் புகாரளித்தனர். குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் குழந்தையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருந்தாலும், விடாமல் முயற்சி செய்த மிங்க்விங், 2015ஆம் ஆண்டு டாக்ஸி ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார். தனது டாக்ஸியில் பயணிப்பவர்களிடம் நடந்ததைக் கூறும் மிங்க்விங், அவர்களிடம் தன் மகள் புகைப்படம் அடங்கிய அட்டையையும் கொடுத்தனுப்புவார்; சமூக வலைதளங்களில் பரப்புமாறும் வேண்டுகாள் விடுப்பார். மேலும், தனது டாக்ஸியிலும் தனது மகள் பற்றிய தகவல்களை அவர் அறிவித்திருந்தார். இதுபோல், கிட்டத்தட்ட 17ஆயிரம் பேரிடம் மிங்க்விங் கூறிய தகவல் கூடிய விரையில் ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டது.
Miracle of Love: Couple in southwest #China’s Sichuan Province finally found their lost daughter 24 years later pic.twitter.com/CCO39WufGi
— CGTN (@CGTNOfficial) April 2, 2018
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் காங் இங் எனும் 27 வயது இளம்பெண், மீடியா தகவல்களைக் கண்டு மிங்க்விங்கைத் தொடர்புகொண்டுள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்ட டி.என்.ஏ. சோதனையிலும் காங் இங்தான் மிங்க்விங்கின் மகள் என்பது உறுதியாகியுள்ளது. இத்தனைகால பாசப்போராட்டத்திற்குப் பின்னர் தங்களது மகள் மீண்டும் வீட்டிற்கு வரயிருக்கும் உற்சாகத்தில் இருக்கின்றனர் மிங்க்விங் தம்பதியினர்.