
பரமத்தி வேலூர் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பட்டதாரிப் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறி வரும் மர்ம நபர்களின் நாச வேலைகளால் சுற்று வட்டார கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவருடைய மனைவி நித்யா (28). இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அதே பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் நித்யாவை மர்ம நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அதே ஊரில் இயங்கி வரும் கரும்பாலையில் வேலை செய்து வந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும் நித்யாவின் உறவினர்கள், இந்த கொலையின் பின்னணியில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், குறிப்பாக குறிப்பிட்ட ஒருவரின் கரும்பாலையில் வேலை செய்து வந்த நான்கு வடமாநிலத் தொழிலாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கிளப்பினர்.
இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி, ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி நடத்தி வரும் கரும்பாலையில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ராகேஷ் (19) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவை மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையில் சேலம் சரக டிஐஜி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜேடர்பாளையத்தில் குவிக்கப்பட்டனர். புதிய சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்களை கிராமத்திற்குள் நுழையத் தடை விதித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, கரும்பாலை உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்த 600க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
நித்யா கொலைக்குப் பிறகு ஏற்கனவே வீ.கரப்பாளையம், வடகரையாத்தூர் கிராமங்களில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, டிராக்டர், பேருந்துக்கு தீ வைப்பு, விவசாய கருவிகளுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், காவல்துறைக்கு சவால் விடும் விதமாக மீண்டும் மர்ம நபர்களின் அட்டகாசம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு சின்ன மருதூரில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. அங்கு 2 ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்களைப் பயிரிட்டுள்ளார். ஜூன் 24 ஆம் தேதி நள்ளிரவில் சவுந்தரராஜனின் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
இந்த சம்பவத்தோடு நில்லாமல் அதே பகுதியில் உள்ள தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில் ஆகியோருடைய தோட்டங்களிலும் புகுந்த மர்ம நபர்கள், பம்ப் செட் குழாய்களையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வழி நெடுகிலும் மரவள்ளிக்கிழங்கு செடிகளையும் பிடுங்கி வீசியெறிந்து விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணா மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். நாமக்கல்லில் இருந்து காவல்துறை மோப்ப நாய் ஷீபா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய், தோட்டம் முழுவதும் சுற்றிவிட்டு, பின்னர் முதன்மைச் சாலை வரை சென்று நின்றுவிட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் பாக்கு மரங்களில் பதிவாகி இருந்த விரல் ரேகை தடயங்கள், கால் தட அச்சுகளை பதிவு செய்தனர். இந்த நாச வேலையில் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நித்யா கொலை வழக்கை சிபிசிஐடி காவல்துறையினரும், மர்ம நபர்களின் நாச வேலைகள் குறித்த வழக்குகளை உள்ளூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரளவு அமைதி திரும்பிய நிலையில் மர்ம நபர்களின் நாச வேலைகள் மீண்டும் தொடங்கியதால், காவல்துறை ஐஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். இந்த சம்பவத்தால் ஜேடர்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேநேரம் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நித்யா கொலை செய்யப்பட்டு 100 நாள்களுக்கு மேலாகியும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததோடு, நாச வேலைகளில் ஈடுபடும் மர்ம நபர்களையும் கண்டுபிடிக்காமல் காவல்துறையினர் திணறி வருவதாகவும் பொதுமக்களிடையே அதிருப்தி கிளம்பியுள்ளது.