
சேலம் அருகே முதலீட்டுத் தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 2 கோடி ரூபாய் சுருட்டிய நிதி நிறுவன பெண் இயக்குநரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய மனைவி மாலதி (30). இவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: “காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் கே.எம்.கே.எஸ் குளோபல் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான நாகராஜ், அவருடைய மனைவி சத்யா, அக்கா கோகிலா, இவருடைய தாயார் மணி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறினர். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். மேலும், 11 மாதத்தில் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர். அதை நம்பி, இந்த நிறுவனத்தில் நான் 62.18 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி ஊக்கத்தொகையோ அசல் தொகையோ வழங்காமல் மோசடி செய்து விட்டனர்.” இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மீது காவல் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜன் விசாரணை நடத்தினார். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் நாகராஜ், சத்யா, கோகிலா, மணி ஆகிய நான்கு பேர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு முதலீட்டாளர்களும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு செல்வதை அறிந்த நிதி நிறுவன இயக்குநர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். மோசடி கும்பலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கோகிலாவை தற்போது கைது செய்துள்ளனர். அவரை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பொருளாதார குற்றப்பிரிவினர் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், ''கே.எம்.கே.எஸ் குளோபல் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பண முதலீடு செய்து ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம். மோசடி நபர்கள் இருக்கும் இடம் குறித்தும், அவர்கள் வாங்கிப் போட்டுள்ள சொத்துகள் குறித்த விவரங்கள் தெரிந்தாலும் அதைப்பற்றியும் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்.'' என அறிவிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.