பணம் கொடுப்பதாக இருந்தால் பிரதமர் ஏன் இத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும்? என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட உள்ளார். கர்நாடகாவில் பாஜக வெற்றிக்காக உழைத்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி. பாஜக மீதும் மோடி மீதும் மக்கள் அபரீதமான நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் எவ்வளவு தான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தாலும், அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மாநிலத்தையே அவர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் இனி எதிர்காலத்தில் வேறு எந்த மாநிலத்தையும் பிடிக்க முடியாது.
தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரசும், பாஜகவும் போட்டியிடும் இடங்களில் பாஜக வெற்றி பெறுகிறது. அதேப்போல் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் போட்டியிடும் இடங்களில் மதசார்பற்ற ஜனதாதளம் முன்னிலை வகுக்கிறது.
ராகுல், சோனியா பிரச்சாரம் அங்கு எடுபடவில்லை. மதத்தையே பிறித்து எப்படி இவ்வளவு நாட்கள் இந்தியாவை பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொண்டார்களோ, அதே சூழ்ச்சியை அவர்கள் கர்நாடகாவிலும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக எங்களுக்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி வந்தால், கர்நாடகாவிற்கு நண்மை கிடைக்கும். இங்கு தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும். ஏனென்றால், உச்சநீதிமன்றம் திறந்து விட கூறிய தண்ணீரைக் கூட சித்தராமையா ஒரு போதும் திறந்துவிட்டதில்லை. ஆனால் எடியூரப்பா ஆட்சி செய்தபோது நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துக்கொண்டிருந்தது.
பணம் கொடுப்பதாக இருந்தால் பிரதமர், அமித்ஷா ஏன் இத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்? கர்நாடக வெற்றி தென்னகத்தில் பாஜகவின் வெற்றி வாசலாக இருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதைத்தான் நானும் கூறுகிறேன் என அவர் கூறினார்.