தமிழக தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ளது. சுணங்கிக் கிடந்த லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் சூடு பறக்கக் களப்பணிகள் செய்துவரும் நிலையில், களத்தில் நிற்கும் முக்கியக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க சும்மாவா இருக்கும்? 'நூறு நாள்' பிரச்சாரத்தின் முதல் நாளான இன்று (20.11.2020) திருக்குவளைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை தடையை மீறி பிரச்சாரம் செய்ததால், கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டம், வருகிற 23 -ஆம் கூட்டப்பட இருக்கிறது. இதில், கூட்டணிக் கட்சிகளுக்கான சீட் ஷேரிங், உட்கட்சிப் பிரச்சனை, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இன்று மாலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.கவில் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அதில், தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை தமிழகத்திற்கு அமித்ஷா வர உள்ள நிலையில், இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமித்ஷா வருகையின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக, அ.தி.மு.கவுடன் சீட் ஷேரிங் குறித்த பேச்சுகள் இடம்பெறும் எனச் சொல்லப்படுகிறது. தமிழக பாஜகவும் வேல் யாத்திரை, மனு நீதி, என எப்போதும் தன்னை பிசியாகவே வைத்துள்ளது. அதேநேரம், பா.ஜ.க பல்வேறு பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்தும் வருகிறது. அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவை கூட்டணியில் இருக்கும்போதே இணைத்து அதிமுகவிற்கு அதிர்ச்சிக் கொடுத்தது பாஜக. சமீபத்தில், நடிகை குஷ்பூ இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தைப் பாய்ச்சியது. அதுபோலவே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி என அனைவரும் பாஜகவில் இணைந்தனர். மேலும் பிரபலமான அனைத்து முகங்களையும் ஒரு குடையின் கீழ் குவிக்க பா.ஜ.க முயன்று வருகிறது.
இந்நிலையில் தான், நாளை அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு தி.மு.கவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல ஒரு சினிமா பிரபலமும் இணையவிருப்பதாகச் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!