Skip to main content

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் என்ன?-வெளியான முதற்கட்ட தகவல்

Published on 12/10/2024 | Edited on 12/10/2024
nn

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து நேற்று (11.10.2024) இரவு 07.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. அதோடு பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணியானது நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழுவானது இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து நீண்டு வருகிறது. பயணிகள் ரயிலுக்கு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. விபத்து குறித்து முதற்கட்ட தகவல்  வெளியாகியுள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நான்கு தண்டவாளங்கள் உள்ளன. அதில் இரண்டு தண்டவாளங்கள் பிரதான தண்டவாளங்களாகவும் இரண்டு தண்டவாளங்களில் ஒன்று மாற்றுத் தடமாகவும் மற்றொன்று லுப் லைனாகவும் பயன்படுத்தப்பட்ட வருகிறது. அந்த லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. லைன் சிக்னல் கொடுக்கப்பட்டும் மெயின் லைனுக்கு செல்லாமல் லூப் லைனுக்கு சிக்னல் சென்றதே விபத்துக்கு காரணம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் குறித்து ஸ்டேஷன் மாஸ்டர் எப்படி அறியாமல் இருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தானியங்கி இன்டர் லாக்கிங் சிஸ்டம் தவறான சிக்னல் அனுப்பியுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசாவைபோல் இன்டர் லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்துகள் நிகழ்ந்ததா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.  

சார்ந்த செய்திகள்