மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், அன்று இரவு மைலாப்பூரில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றார். பின்பு, அங்கு ஒரு காய்கறிக் கடைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசி களுடன் கலந்துரையாடி காய்கறிகளையும் வாங்கினார்.
மத்திய அமைச்சர், மார்க்கெட்டுக்கு நேரில் சென்று காய்கறிகளை வாங்கியது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார் இந்த வீடியோ காட்சி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி செயளாலர் கார்த்திகேய சிவ சேனாதிபதியின் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று ப.சிதம்பரம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த ஆறுமாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் 2000 கோடி டாலர். அப்படியானால் 160 ஆயிரம் கோடி ரூபாய். ஆக நடப்புக் கணக்கு பற்றாக்குறை விரியும். கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலம் என சொல்ல முடியாது. இதில் தான் அரசு சமயோசிதமாக செயல்பட்டு செயல் பட்டு முடிவு எடுக்க வேண்டும். சென்னை மைலாப்பூரில் போய் சுண்டைக்காய் என்ன விலை? கீரை என்ன விலை என கேட்டால் மட்டும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது” எனக் கூறியுள்ளார்.