
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வீ.கொல்லூர் பகுதியில், நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அப்பெண் தனது வீட்டின் ஓரமாக உள்ள மேற்கூரை இல்லாத பாத்ரூமில் தனியாக அவ்வப்போது குளிக்கும்போது, அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற வாலிபர் தன் வீட்டின் மாடியில் இருந்து அந்தப் பெண் குளிக்கும் காட்சியை வீடியோவாக எடுத்துள்ளார்.
பிறகு, அந்த வீடியோ காட்சிகளை அந்தப் பெண்ணிடம் காட்டி வெங்கடேஷ் அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தன் கணவரிடம் கூறியுள்ளார். வீடியோ எடுத்த வெங்கடேஷிடம் சென்று இதுபோல் தகாத செயலில் ஈடுபடலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்துகொண்டு, அந்தப பெண்ணின் கணவரை திட்டியதோடு உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, அந்தப் பெண் அவரது கணவர் ஆகிய இருவரும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் காலதாமதம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் நேற்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் போலீசார் வெங்கடேஷ் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நான்கு பேரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியே குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியது மேலும் இதுகுறித்து கேட்கவந்த அவரது கணவரை தாக்கியது உள்ளிட்ட சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.