Skip to main content

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கோவிலான அறிவாலயம்!- அமுக்கப்பட்ட எதிரணி கோழிக்குஞ்சுகள்!    

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

virudhunagar district admk councilors

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றிபெற்ற மாற்று கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும், கழுகு தூக்கிச் செல்லும் கோழிக்குஞ்சுகளாகிவிட்டனர். சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விஷயத்திலும்  ‘அது’ நடந்திருப்பதாகப் பேசப்படுகிறது.  

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர், முதல் துணை மேயர் கனவானது, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற ஆளும்கட்சியான தி.மு.க.வில் பலரையும் ஆட்டுவித்துவரும் நிலையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவருக்கும் துணை மேயராகிவிடலாம் என்ற பேராசை துளிர்த்துள்ளது. ‘ஒத்த கவுன்சிலரா போனால் துணை மேயராகிவிட முடியாது..’ என்ற அரசியல் கணக்கை உணர்ந்த அந்த அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர், இரட்டை இலையில் வெற்றிபெற்ற 11 கவுன்சிலர்களையும் கூண்டோடு கொண்டுபோய் தி.மு.க.வில் சேர்த்துவிட்டால், பலன் கிடைக்காமலா போகும் என்று பேசி முடிவெடுத்து,  ‘நீ வா.. நீ வா..’ எனக் கூப்பிட, ஆளும்கட்சியும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கும் அ.தி.மு.க.வை ஒன்றும் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன், வெற்றிபெற்ற எந்தக் கட்சி கவுன்சிலராக இருந்தாலும், ஆளுக்கேற்றவாறு ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம்வரை தலைக்கு விலைபேச, ‘மாநகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால்தானே தேர்தலில் வாக்காளர்களுக்குச் செலவழித்ததை சம்பாதிக்கமுடியும்? அதற்கு முன்பே, இத்தனை லட்சங்கள் தேடிவரும்போது வாங்கிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்..’ என ஒன்றுகூடி ஆலோசித்து,  தி.மு.க.வை நோக்கி பறந்துவிட்டதாக அடித்துச் சொல்கிறார்கள், அதிமுக தரப்பில்.

 

ஆனாலும், 11 அ.தி.மு.க. கவுன்சிலர்களில் இருவர், ‘நேற்றுவரையிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோம்; தி.மு.க. ஆட்சியை கடுமையாகத் திட்டினோம். அ.தி.மு.க. அடையாளம்தானே நம்மைக் கவுன்சிலராக்கியது? ஆளும்கட்சியின் பணச்சூதாட்டத்தில் தெரிந்தே சிக்கிக்கொண்டு, ஐந்து வருடங்களில் மேலும் மேலும் சம்பாதிப்பதற்காக, தி.மு.க.வுக்கு தாவினால் ஓட்டுபோட்ட மக்கள் என்ன நினைப்பார்கள்? எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆன்மா நம்மை மன்னிக்காது..’ என்று மனசாட்சிக்குப் பயந்து,  தாவும் 9 கவுன்சிலர்களோடு இணைந்து பயணிக்காதது, உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது.   

 

ஆக, மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 24, காங்கிரஸ் 6, வி.சி.க. 1, ம.தி.மு.க. 1 எனப் பெரும்பான்மை பலமிருந்தும், சுயேச்சைகளை வளைத்துவிட்ட நிலையில், அ.தி.மு.க.விலிருந்தும் 9 கவுன்சிலர்களை தி.மு.க.வில் இணைத்து, அசுரபலமுள்ள கட்சியாக சிவகாசி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் இருக்கைகளில் கம்பீரமாக அமரப்போகிறது தி.மு.க. 

 

உள்ளாட்சித் தேர்தலில் செலவழித்து விட்டதைப் பிடிப்பதற்காக, 9 அ.தி.மு.க. கவுன்சிலர்களையும் தன்னோடு எங்கோ அழைத்துச் சென்றுவிட்டார் என அ.தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டப்படும் திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பொன் சக்திவேல் தரப்பிலிருந்து “அப்படியெல்லாம் தி.மு.க.வுக்கு போகவில்லை. எல்லோரும் சேர்ந்து கோவில் கோவிலாகப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று மழுப்பலாகப் பதில் வருகிறது.  

 

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிரடியான ஆட்டமாடி தமிழ்நாட்டு அரசியலில் ஜாம்பவனாகத் திகழ்கிறது தி.மு.க.!
    


 

சார்ந்த செய்திகள்