Skip to main content

தாயகம் திரும்பிய வினேஷ் போகத்; கண்ணீருடன் வரவேற்பு

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
Vinesh Phogat returned home; Welcome with tears

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத் 'இனி என்னிடம் போராடச் சக்தியில்லை' என்று கூறி மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே சமயம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு உறவினர்கள் கண்ணீரோடு வரவேற்பு அளித்தனர். திறந்தவெளி வாகனத்தில் சொந்த கிராமத்திற்கு வினேஷ் போகத் செல்ல இருக்கிறார். ஹரியானாவில் 12 முக்கிய இடங்களில் அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாக்ரி தாத்ரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பலாலி கிராமத்திற்கு அவர் செல்ல உள்ளார். பேச முடியாமல் திறந்தவெளி வாகனத்தில் கண்ணீருடன் வினேஷ் போகத் நிற்கும் காட்சிகளும், உடனிருப்போர் ஆறுதல் சொல்லி தேற்றும் காட்சிகளும் கலக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் வினேஷ் போகத்திற்கு  வெள்ளி வென்ற வீரர்களுக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. வினேஷ் போகத்துடன் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரும் டெல்லி வந்தடைந்தனர்.

சார்ந்த செய்திகள்