தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறி வருகிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி வருகை தந்துள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வரவேற்பு அளித்தார்.
பின்னர் விமான நிலைய ஓய்வு அறையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.