திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
அதிமுக, திமுக, அமமுக, என மும்முனைப் போட்டியாக உருவெடுத்திருக்கும் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வேட்பாளர்களை முதலில் அறிவிக்கப்போகிறார்கள் என்கிற பேச்சுக்கு இடையில் முதலில் தனது கட்சி வேட்பாளர் பெயரை அறிவித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜ்தான் போட்டியிடுவார் என பரவலாக மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்தநிலையில் இன்று அதிரடியாக அவரே வேட்பாளர் என அறிவித்திருப்பது சக அரசியல் கட்சியினரை முனு முனுக்கவைத்திருக்கிறது.
தஞ்சாவூர், காவிரி திருமண மண்டபத்தில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.டி.வி தினகரன் தலைமையில் (இன்று) 4-ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டனர். இறுதியில் திருவாரூர் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜே வேட்பாளர் என அறிவித்தார் தினகரன்.
யார் இந்த எஸ்.காமராஜ்?
மன்னார்குடியைச் சேர்ந்த எஸ்.காமராஜ் பிரபலமான தரணி கல்வி குழுமத்தையும், தரணி கன்ஸ்டரெக்ஷனையும் நடத்திவருகிறார். 1981-ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்த இவர், திவாகரன், சசிகலா குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்தார். மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக ஒருமுறையும், ஒன்றியக்குழு உறுப்பினராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு ஜெயலலிதா, இவரை மாவட்ட செயலாளராக அறிவித்தார். அதன் பின் 16 மாதங்களில் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சிட்டிங்க் அமைச்சரான ஆர்.காமராஜிடம் வழங்கப்பட்டது. அன்று முதல் சசிகலா குடும்பத்தோடு மிகவும் நெருக்கத்தோடு இருக்கும் இவருக்கு, 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திவாகரன் மற்றும் சசிகலாவின் ஆசியோடு மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான டி.ஆர்.பி.ராஜாவிடம் 8,200 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார். தான் தோற்றதற்கு சிட்டிங் அமைச்சரான காமராஜின் உள்ளடி என்பதை தெரிந்து கொண்டு வாய்ப்புக்காக அமைதியாக காத்திருந்தவர். அதிமுக இரண்டாகப் பிரிந்ததும். அமமுகவில் திவாகரனுக்கும், தினகரனுக்கும் ஆதரவாக சென்றார்.
அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. சிறிது காலத்தில் திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலால் தினகரனிடம் செல்வதா, திவாகரனிடம் செல்வதா என்கிற குழப்பத்திற்கு ஆளாகி அமைதியானவர் மீண்டும் தினகரனிடமே ஐக்கியமானார்.
இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கலைஞர் காலமானதை தொடர்ந்து காலிதொகுதியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆனையம அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவராகவும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருப்பதனாலும் இவருக்கு தற்போது மாஸ் கூடியிருக்கிறது என்கிறார்கள் பலரும்.
திமுகவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடப்போகிறார் என்கிற பேச்சு பரவலாகவே இருந்த நிலையில், இறுதி நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர் கலைவாணன் போட்டியிடுவார், என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது திமுக தலைமை. அதேவேளையில் அதிமுக இன்று நான்காம் தேதி வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனைக்கூட்டம் நடத்த இருந்த நிலையில் திடீரென நாளை 5 ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.