பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் போக்குவரத்து சேவை 84 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாம்பன் தூக்குப்பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஏற்பட்ட விரிசல் காரணமாக ராமேஸ்வரத்திற்கு வரவேண்டிய அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின் பாம்பன் பாலத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தபின் பயணிகள் இல்லாத ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாம்பன் பாலத்தில் ஏற்பட்டிருந்த பழுதடைந்த தகடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய தகடுகள் பொருத்தப்பட்டு அதிர்வு தன்மையை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டது. கண்காணிப்பு பணியை ரயில்வே ஊழியர்களும் கட்டுமான அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பாலத்தின் உறுதித்தன்மை குறித்து கடந்த 3 தினங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே துறையினர் ஒப்புதல் வழங்கினார்.
இதனையடுத்து இன்று 84 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக அதிகாலை 2 மணிக்கு வாரணாசியில் இருந்து ராமேஸ்வரம் வந்த விரைவு வாரணாசி எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலத்தில் பத்து கிலோமீட்டர் வேகத்தில் கடந்து ராமேஸ்வரம் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை சேது எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வந்த நிலையில் மதுரையில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கும்போது, ''84 நாட்களாக ரயில் இல்லாததால் அதிக பணம் கொடுத்து பேருந்துகளில் சென்று வந்த நிலையில் இன்று ரயில் இயக்கப்பட்டதால் தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இதனால் செலவு மிகவும் குறைவு ஏற்படும்'' எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.