திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தால் அனைத்து மாநில மக்களும் பயன்பெறுவார்கள்" என்றார்.
ரேஷனில் மண்ணெண்ணெய் விலை அக்டோபர் 1- ஆம் தேதி முதல் ரூபாய் 1.50 உயர்த்தப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், "விலை ஏற்றமல்ல, அவ்வப்போது வரும் விலை மாற்றம்தான். தமிழக அரசு கேட்பதை விட குறைந்த அளவே மண்ணெண்ணெய்யை மத்திய அரசு வழங்குகிறது" என்று கூறினார்.
பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் ரேஷனிலும் மண்ணெண்ணெய் விலை உயருகிறது. அதன்படி, அக்டோபர் 1- ஆம் தேதி முதல் ரேஷன் கடையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூபாய் 15 லிருந்து ரூபாய் 16.50 ஆக உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.