Skip to main content

நாகுடி போராட்டத்தில்  திருநாவுக்கரசர், ஜி.கே. வாசன் பங்கேற்பு

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
n

  

 7 அமைச்சர்கள் இணைந்து கல்லணையில் தண்ணீர் திறந்தார்களே அந்த தண்ணி இன்னும் எங்க ஊருக்கு வரலயே எங்கே போச்சு அந்த தண்ணி.. வறட்சி நேரத்துல கூட கடைசி நேரத்தில் தண்ணீர் இன்றி பயிர் கருகி இருக்கு.. ஆனா இந்த வருசம் அணைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் போகும் நேரத்தில் விதைக்கும் போதே கருகும் அவல நிலை எப்படி வந்தது. ஆளும் அரசாங்கமும், அதிகாரிகளும் தான் காரணம். எங்களுக்கு தண்ணீர் கொடு.. இல்லை என்றால் கல்லணை கால்வாய் ஓரமாகவே காத்திருக்கிறோம் என்று கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 22 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையோரம் தொடங்கிய விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் படிப்படியாக நெடுவாசல் போராட்டம் போல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

    விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்திற்காக போராட்டக் களத்திற்கு வந்திருக்கும் நிலையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் என்ன வேலை என சில மாணவர்கள் எழுப்பிய கேள்வி.. அறந்தாங்கி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளை பொங்கி எழ வைத்தது. 4 வது நாள் போராட்டத்திற்கு அணிவகுத்து வந்து பந்தலை நிறைத்தார்கள் மாணவ, மாணவிகள்.. தண்ணீர் கொடு.. தண்ணீர் கொடு... கடைமடைக்கும் தண்ணீர் கொடு என்று முழக்கங்களை எழுப்பிய மாணவ மாணவிகள் எங்களைப் பொல மற்ற கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டக் களத்திற்கு வந்தால் தான் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போல வெற்றியை பெற முடியும் என்றனர் ஆவேசமாக.

 

    விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதை அறிந்த திமுக,  காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட்கள், த.மா.கா, அ.ம.மு.க என்று மேலும் பல கட்சிகளும் தங்கள் தலைவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்துள்ளனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் முதல் நாளே வந்து சென்றார். இன்று 4. வது நாளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் 4 வது நாளான சனிக்கிழமை பங்கேற்றனர்.

 

n

 

திருநாவுக்கரசர்... தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பக்கம் அதிக நீர் வரத்தால் வெள்ளம் போகிறது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இதற்கு காரணம் பொதுப்பணித்துறையின் அலட்சியமே . பொதுப்பணித்துறையினர் முறையாக ஆறுகளை தூர்வாரியும், அணைகள், குளங்களை பராமரிக்காததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

 

பொதுப்பணித்துறையை கவனிக்கும் முதல் அமைச்சர் தனது துறை முறையாக கவனிக்கவில்லை. நாகுடி பகுதிக்கு முறையாக தண்ணீர் வராததால், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடைமடை பகுதிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர முதல்அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

 

     தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர; ஜி.கே.வாசன்.. கடைமடை பகுதி விவசாயிகளுக்கு இது இருண்ட காலமாக இருக்கிறது. 10 நாட்களில்  2 முறை மேட்டூர் அணை நிரம்பியும் கூட, கடைமடை பகுதிகளில் ஏரி, குளங்கள்  வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததால்தான். தண்ணீர் 120 அடியை எட்டியபோதும்,  30 நாட்களுக்கு பிறகும் தண்ணீர் வராத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசுதான்தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். 


     தமிழக அரசின் நீர்மேலாண்மை முறையாக நடைபெறவில்லை. பொதுப்பணித்துறை தூங்கி கிடக்கிறது. அது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். விவசாயிகளை சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்கமுடியும் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்