அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆயுதங்களுடன் நடந்து வருவது, தாக்குவது, வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து போட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிவேகமாக செல்லும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்த நிலையில், இது குறித்து கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். இதில் விலையுயர்ந்த, அதிக வேகத்தில் செல்லக்கூடிய பைக்குகள் அதிக அளவில் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஓட்டேரியை சேர்ந்த பாலா என்கின்ற பாலமுருகன் அதேபோல் சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த சூமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் இருசக்கர வாகனங்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் அவை அனைத்தும் திருடப்பட்ட வாகனங்கள் என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து அதிவேகமாக செல்லக்கூடிய விலை உயர்ந்த எட்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.