தஞ்சை பாபநாசம் அருகே விவசாயத் தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் தெடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பாபநாசம் பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ஒருவரை, பச்சை துணியால் கண்ணை கட்டி அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடித்துள்ளனர். வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம் அண்ணா... வேணாம் அண்ணா...'' என கதறும் அந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறிய கூலித்தொழிலாளி, இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பணம் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதும், தாக்குதல் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. அதேபோல் பணம் திருடியதாக எந்த காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும், கூலித்தொழிலாளியைத் தாக்கும் அந்த வீடியோ காட்சியும், அவர் கதறும் காட்சியும் காண்போரைப் பதற வைக்கிறது.