தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா, தன் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் தற்போது இருக்கும் வகுப்பறைகளில் இட நெருக்கடியாக உள்ளது. எனவே, தங்களது பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தென்காசி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பேசும் போது, தன்னுடைய பள்ளிக்கு உதவி கேட்டு மாணவி தனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி தெரிவித்த முதல்வர், உடனடியாக வகுப்பறைகள் கட்ட ரூ. 35.50 லட்சம் ஒதுக்கி அனுமதியளித்தார். ‘எத்தனை நம்பிக்கையை அந்த மாணவி என் மீது வைத்திருந்தால்... முதல்வருக்கு கடிதம் எழுதினால் நிறைவேற்றுவார் என்று எழுதிய அந்த மாணவியை நான் பாராட்டுகிறேன்’ என்று முதல்வர் அந்த மாணவியை வாழ்த்தினார்.
இந்நிலையில், தான் எழுதிய கடிதம் மூலம் பள்ளியின் குறையைத் தீர்த்து வைத்த முதல்வருக்கு மாணவி நன்றிக்கடிதம் எழுதியிருக்கிறார். ‘எங்கள் பள்ளிக்கு உதவிய முதல்வருக்கு நன்றி. நான் தென்காசி கூட்டத்தில் உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன்.’ என்று தன் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அவரை நாம் சந்தித்த போது, முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கடிதம் எழுதிய மாணவி ஆராதனாவும் அவரது தந்தை தங்கராஜும் தெரிவித்தனர். மேலும், ஊரில் உள்ளவர்களும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இது குறித்து தர்மராஜ் பேசும் போது , “6 வகுப்பறைகள் கட்ட முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே பள்ளி குளக்கரையின் அருகில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி மாணவர்களுக்கு சிரமமாகிவிடும். இதனால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கல்வித்துறை மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இதுகுறித்த விபரத்தைச் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். கலெக்டரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். தண்ணீர் இல்லாத இடத்தில் கட்டலாம் என்றனர். பக்கத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 4.76 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் வகுப்பறைகளைக் கட்ட அரசு உதவ வேண்டும். மேலும், இட நெருக்கடியால் ’இ-சேவை’ மையத்தில் ஒரு வகுப்பு செயல்படுகிறது.” என்று தெரிவித்தார்.