கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான செந்தில் பாலாஜி டி.டிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் திடீரென டிடிவிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவப் போகிறார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிபட்டி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வனிடம் கேட்டபோது....
‘’சென்னை ஐகோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என தீர்ப்பு கூறியதை கண்டு துணைபொதுச்செயலாளர் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். அதன்பின் துணை பொதுச் செயலாளரும் மேல்முறையீடு செய்யலாமா? வேண்டாமா? என எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பு தான் மேல்முறையீடு வேண்டாம் எனக்கூறி தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். அது தான் உண்மை. அப்படி இருக்கும்போது செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்ய சொன்னதாகவும் அதை துணை பொது செயலாளர் அண்ணன் டிடிவி மறுத்ததாகவும் அதனால அண்ணன் டிடிவி க்கும் செந்தில் பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது தெரிந்து தான் நானும் செந்தில் பாலாஜியிடம் செல் மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது அண்ணே அப்படியெல்லாம் இல்லை. தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். '"நான் எப்பவும் அண்ணன் டிடிவி பக்கம்தான் இருப்பேனே தவிர திமுக பக்கம் எல்லாம் போக மாட்டேன் '"அப்படி ஒரு பொய்யான தகவல்களை யாரோ? பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் அடித்து கூறினார்கள்.
அது தான் உண்மை. அதுபோல் துணை பொதுச்செயலாளருக்கும் செந்தில்பாலாஜிக்கும் ஏதோ கருத்து வேறுபாட்டால் தான் அண்ணன் டிடிவி பிறந்தநாள் கொண்டாடவில்லை என ஒரு தகவல்களை பரப்பி வருகிறார்கள். அது உண்மை அல்ல. தற்பொழுது சின்னம்மா உள்ளே இருப்பதால் இந்த நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது என்பதற்காகத்தான் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. அதோடு கட்சிப் பொறுப்பாளர்கள் என்னை வாழ்த்த வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அதனாலதான் நாங்களும் போகவில்லை. அது தான் உண்மையே தவிர மற்றபடி துணை பொதுச் செயலாளருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதுபோல் திமுக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் செந்தில் பாலாஜியும் ஏர்போர்ட்டில் வருவது போல் ஒரு படம் இணையதளத்தில் போட்டு இருக்கிறார்கள். அது இன்னைக்கு எடுத்த படம் அல்ல. அது பழைய படம் வேண்டும் என்றே பழைய படத்தை எடுத்துப்போட்டு ஒரு பொய்யான தகவல்களை இணைய தளத்தில் பரப்பி வருகிறார்கள். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும், அதிமுக பிஜேபி மற்றொரு அணியாகவும், மூன்றாவது அணியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தலில் போட்டி போடுமே தவிர அதிமுகவில் எல்லாம் இணைய மாட்டோம். அந்த பேச்சுக்கே இடமில்லை’’ என்று கூறினார்.